Showing posts with label review. Show all posts
Showing posts with label review. Show all posts

Sunday, June 10, 2018

காலா - கரிகாலன் !!! - Kaala Review in Tamil



காலா - கரிகாலன் !!!


இராமாயணம் - இராமன் இராவணன் யுத்தமே அதன் பிரதானம். சீதையை இராவணன் கடத்திச் செல்ல, இராமன் மீட்டு, அக்னிப்பிரவேசம் அளிக்கிறார். பின்பு முடிவில்லா வனவாசம். இராமபிரான் கடவுள் ஒளியின் வடிவம். இராவணன் நம்முளிருக்கும் தீய குணங்களின் வடிவம். எவ்வளவு சக்தி இருப்பினும், இறைவனை அறிய மறுக்கும் குணத்தின் உருவகம்.

மணிரத்னத்தின் இராவணன் - இதில் இராவணன் நாயகனாகிறான். சீதையைக் கவர்ந்து வர,இராமன் தேடத் தேட, பட இறுதியில், இராமன் முழுதும் நல்லவனல்ல எனப் புரிகிறது சீதைக்கு. இராமனாக இருந்தால் மட்டுமே, அவனால் இராவணன் அழிய வேண்டுமென்பதில்லை அனைத்து நிகழ்வுகளிலும்!!!

காலா எனத் தலைப்பிட்டுவிட்டு, இராமாயணம், இராவணன் என எழுதுகிறேனென்று பார்க்கிறீர்களா!!! இதுவும் இராமாயணத்தின், இராவணின் ரீமேக் தான். மேலும், இப்பொது படம் ஓட எதெல்லாம் ட்ரெண்டிங் ??? சாதி அடக்குமுறை, அரசியல், ஊழல், ஜல்லிக்கட்டுப் போராட்டம், பெண்ணியம். இவை அனைத்தையும் கலந்து, தலைவரின் நடிப்பில் மிளிர்கிறது.

இராமனாக நானா படேகர் - ஹரி தாதா வை உருவகம் செய்கிறார்கள். பெயர் ஹரி. மும்பையில் எங்கு பார்த்தாலும் அவர் படம் தான்(God is omnipresent). புனிதத்தின் அடையாளமாக வெள்ளை உடை. வீட்டில் இராமாயண பஜனை. கட்டிட நிறுவனத்தின் பெயர் "மனு". "ஏன் இராமன் இராவணனைக் கொல்ல வேண்டும்?" என்ற கேள்விக்கு, "வான்மீகி எழுதிட்டாரே!! அப்பக் கொன்னு தான ஆகனும்??" என்ற பதிலிலேயே படம் புரிந்துவிடுகிறது.

சுத்தமான மும்பை என வாக்கு அளித்தாலும், உயர்ந்த இடத்தில் கடவுள் போல வாழ்ந்தாலும், மக்களைக் காக்க மறுத்தால், இராமனும் தண்டிக்கப்படவேண்டியவனே என்ற கருத்தை ஒவ்வொரு இடத்திலும் வலியுறுத்துகின்றனர்.

இராவணன் - காலா என்ற கரிகாலன்.  காலா என்றால், தமிழில் காப்பவன் என்கிறார்கள். மற்றோர் பொருள் எமன் - காலன். தன் மக்களுக்காகப் போராடும் இராவணன். காலாவுக்கு 4 மகன்கள். வத்திக்குச்சி திலீபன் மூத்த மகனாக, பலம் பொருந்தியவனாக, காலாவிற்குக் காவலாக. இந்திரஜித்தின் உருவகம்.

அப்போ சீதை? இரண்டு கதைகள் இருப்பதாகத் தோன்றியது எனக்கு.

சீதை - சரீனா:


இராவணன் ஆசைப்பட்டு, அடைய முடியாமல் போன காதலி சரீனா. அவர்களிருவரையும் நெருப்புப் பிரிக்கின்றது இருமுறை. இக்கதையில், சரீனாவும் காலாவைக் காதலிக்கிறாள். தனியாளாக, மகளை வளர்க்கிறாள்(சீதை லவகுச வனவாசம் போல்). ஹரிதாதா சரீனாமேல் ஆசை கொள்ளவில்லை. மாறாக, இகழ்கிறான். இஸ்லாமியப் பெயரை உச்சரிக்கும் போது காது கேட்காதது போல் நடிப்பது, காலில் விழக்கூறுவது, என மதவெறி கொண்டவன். இராவணனோ, அதாவது காலாவோ, மனைவிக்குத் துரோகமிழைக்காத நல்லவன்.
சரீனா ஆரம்பத்தில், மனுவின், தாராவி சீரமைப்புத் திட்டத்தை ஆதரிக்கிறாள். பின்பு, மேற்சொன்ன காட்சிக்கடுத்து, காலாவின் ஆதரவாளராகிறாள்.

சீதை - தாராவி:


பூமாதேவியே சீதை. சீதையாக தாராவி. தாராவிக்காகவே ஹரிதாதா, காலா யுத்தம்.

வத்திக்குச்சி திலீபன் - காலாவின் மகன் செல்வமாக மிரட்டுகிறார். வாழ்வுதான்.

ஈஸ்வரி ராவ் - காலாவின் மனைவியாக ரசித்து ரசித்து நடித்திருக்கிறார். திருநெல்வேலி மணம் செம. எல்லாக் காரியங்களிலும் காலாவிற்குத் துணையாக இருப்பதில், சரீனா வந்ததும், கணவர் அவளிடம் பேச தனிமை ஏற்படுத்திக் கொடுப்பதில், மகன்களை விட கணவனை நேசிப்பதிலும் - ரஞ்சித்தின் தேர்வு அற்புதம்.

மணிகண்டன் - காலாவில் கடைப்புதல்வன் லெனின். போராடி வெல்லவேண்டும், வன்முறை, விதிமீறலாகாது என நம்பி, காலாவை அசுர குலத் தலைவன் என அழைக்கும் பாச மகன். தந்தைக்கும் மகனுக்கும் தாராவியின் நலன் முக்கியம். வெவ்வேறு எண்ணங்களிருப்பினும், அந்த பிணைப்பு - துடிப்பான நடிப்பில் கவர்கிறார்.

புயல் சாருமதி - படத்தில் துவக்கத்திலிருந்து, யாரிந்தப் பெண் என புருவம் உயர்த்த வைக்கிறார். லெனினின் காதலியாக, தாராவியின் நலனிற்காக லெனினையும் எதிர்க்கும் பெண்ணாக, அற்புதம்.

ஹூமா குரேஷி - சரீனா. காலாவின் முன்னாள் காதலி. தேர்ந்த நடிப்பு.

நானா படேகர் - வழக்கமான வில்லன். பெரிதாகச் சொல்வதற்கொன்றும் தோன்றவில்லை.

சமுத்திரக்கனி - வாலியப்பன். காலாவின் உயிர்நாடியாக இருக்கும் நண்பன். எப்போதும் போதையில் இருந்து கொண்டே பன்ச் டயலாக்குகள் பேசுவதிலிருந்து, கடைசி வரை உடல் மொழியில் மிரட்டுகிறார்.

மேலும் பல கதாப்பாத்திரங்கள். நேர்த்தியான தேர்வு அனைத்திற்கும்.

கபாலியின் குமுதவல்லி, யோகி போல, இதில் செல்வி, சரீனா, சாருமதி. ரஞ்சித்தின் பெண்கள் ஆச்சரியப்பட வைக்கிறார்கள்

செல்வியிடம் குமுதவல்லியின் சாயல். சரீனாவைப் பார்த்துவிட்டு வரும் காலாவிடம், தன் பள்ளிப் பருவத்துக் காதலனைப் பார்க்கக் கிளம்புவதாகக் கூறுவது, மகனை வெளியேற்றும் காலாவை அதட்டிவிட்டு, "போய் நல்ல இடமா இருடா" என்று சொல்லிவிட்டு வருவது.. கலக்கல்.

சரீனா காலாவின் முன்னாள் காதலியாக, தாராவிக்காக போராடும் போராளியாக, காலாவை எதிர்த்துப் பேசும் துணிச்சலான பெண்ணாக, அதே சமயம், காலாவின் உற்ற தோழியாக, ஹரி தாதாவின் காலைப் பிடிக்க வைத்ததும் வெறி கொண்டவளாக  வெளியே வரும் போதும், கண்களிலேயே பேசிவிடுகிறார்.

சாருமதி, முதல் காட்சியிலேயே எட்டி உதைப்பதாகட்டும், "எப்படி மரியாத குடுப்பது? குனிஞ்ச தல நிமிராம வரணுமா?" என நேரடியாக கேட்பதாகட்டும், எடுத்ததுமே மனதில் ஒட்டிக் கொள்கிறார். காவலர்கள் துகிலுரிக்க, தவழ்ந்து செல்லும் புயல், துணிக்கு பதிலாக அருகிலிருக்கும் இரும்புக் கம்பியை எடுத்துத் தாக்க, புரட்சிப் பெண்ணாக எழுகிறாள்.

மகன் இறந்த பின்பும், உரிமைக்காகவே குரல் கொடுக்கும் தாய்,"எங்க சுடு பாக்கலாம்" என முன்னால் வரும் பெண்கள் என வழக்கமாக ரஜினி படப் பெண்களைக் கடந்த இரு படங்களிலும் மாற்றியிருக்கும் ரஞ்திற்கு நன்றிகள்.

படத்தின் கிளைமாக்ஸ் தான் முக்கியமே.இராவணவதத்திற்குப் பின் சீதைக்கு அக்னிப் பரீட்சை அளிக்கிறான் இராமன். இங்கு, இராவணன் அக்னியில் கலக்கிறான். வெற்றியுடன் வரும் ஹரி தாதா எங்கு கண்டாலும், காலாவின் முகமே தெரிகிறது. வெள்ளையில், கருப்பு வண்ணம் வீசப்படுகிறது. கருப்பு வண்ணமில்லை. ஆனால் கருப்பில்லாமல் எந்த வண்ணங்களுமில்லை. உழைப்பின் நிறம் கருப்பு. அதனை மறுப்பது எந்த மாயாஜால வண்ணமாக இருப்பினும், அதில் கருப்பு உண்டு.சிவப்பு, நீலம் என வண்ணக் கலவைகள் கருப்புக்கு அடுத்த படியாக தெறித்து எழ, இராமவதம் நடக்கிறது.
"நான் ஒருத்தன் செத்தா என்ன? இங்க இருக்க எல்லாரும் காலா தான்" - நம்மைக் காக்கத் தனியாக யாரும் இருப்பதை விட, மாற்றம் நம் ஒவ்வொருத்தரிடமும் ஆரம்பிக்க வேண்டுமென அழுத்தமாக பிதிவிட்டுள்ளார் ரஞ்சித்.

இசை - பாடல்கள், பிண்ணனி இசை எதுவுமே மனதில் ஒட்டவில்லை(ஒன்றைத் தவிர). எந்தக் காட்சியிலும், பிண்ணனி இசை உணர்வுகளைத் தூண்டவில்லை. செல்வி இறக்கும் காட்சிகளில் கூட பிண்ணனி இசை எந்தவொரு உணர்ச்சியும் வெளிக்கொணரவில்லை.

அடுத்து?

தலைவர் - என்ன சொல்லவென்று தெரியவில்லை. நடிப்பின் மன்னன். அவர் இல்லாவிடில், இப்படம் இல்லை. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கருப்பு போல் காலா. பழைய ரஜினி வந்தாயிற்று. அந்த முகத்தில் தான் எத்தனை பாவங்கள்? இதற்குமேல் நான் எதுவும் கூறப்போவதில்லை. தலைவரின் நடிப்பு, பார்த்து ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்று. வார்த்தைகளால் விளக்க முடியாது.

இராமாயணம் ரீமேக் - பல பேர் பரீட்சித்துவிட்டார்கள். தாராவி -- அதெல்லாம் நாயகன் படத்திலேயே பார்த்தாயிற்று. போராட்டக் காட்சிகள் - ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அப்படியேக் காண்பித்தாயிற்று.புதிதாக ஏதுமில்லையெனினும், நம்மைக் கட்டிப்போடுவது ரஜினி மட்டுமே.


கபாலியில் My Father Baliah. இதில் காலா மேசையில் "இராவண காவியம்" புத்தகம். அதுவும் 'க்யா ரே செட்டிங்கா" சண்டைக் காட்சிக்குப் பின். சரீனா வருகையில் தலைவர் படிக்கும் புத்தகத்தைச் சரியாக பார்க்கவில்லை. இறுதியில் ஒரு போர்டு.. "Singara chennai is no more a dream.. H. Jara".:-)

இப்படி, படத்தில் ஏகப்பட்ட நுணுக்கமான காட்சிகள் உள்ளனஎன் சிற்றறிவிற்கு எட்டியவை இவ்வளவே.மேலும் தோணபதிவிடுகிறேன்.

காலா - ரஜினி மற்றும் கடைசி 20 நிமிடங்களுக்காக!!!


ஆனால் காலாவா கபாலியா என்று கேட்டால், கண்டிப்பாக கபாலி தான் !!!!

Monday, April 10, 2017

காதலும் காதல் சார்ந்த இடமும்!!!

காதலும் காதல் சார்ந்த இடமும்!!!
அகத்திணை கொள்கைகளில் ஒன்று உண்டு. முன்னிலைப் புறமொழி.
தலைவி, தலைவன் (பெண், பையன் தான். ஆனால் இது தமிழின் அழகு) பழகும் முன், தலைவன் தோழியை நாடுகிறான் தங்கள் களவிற்கு. தோழி துணையோடு ஆரம்பிக்கும் உறவில், தலைவனிடம் பேச வெட்கம் கொண்ட தலைவி, தோழியிடம் கூறுவாள். தலைவன் எதிர்நின்றும் தலைவி தோழியிடம் உரையாடினாலும், சொல் தலைவனுக்கானது. முன்னிலை இருக்க புறம் பேசுவது, முன்னிலைப் புறமொழி. அகத்திணைப் பாடல்களில் உள்ள அழகியல் பலவற்றில் இதுவும் ஒன்று.
குறிஞ்சித்திணையில் குறுந்தொகைப் பாடல் ஒன்றுண்டு.

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.

குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும் !!! பாறைகள், குன்றுகள் நிறைந்த இடத்தில் வாழும் தலைவி. யாரும் அறியாமல் அவளைச் சந்திக்க வந்து போகும் தலைவன். காயும் நிலவு மட்டும் சாட்சியாக. நிலவொளியில், வேங்கை மலர்கள் கொட்டிகிடக்கும் குன்று. இருளில், புலி அமர்ந்திருப்பது போலத் தோன்றுகிறது. அங்கு அமர்ந்திருக்கும் தலைவன் தலைவி.மெளனத்தினூடே தலைவி பேச இடம் தேடுகிறாள். திருமணம் பற்றிப் பேச விழைகிறாள். முன்சொன்ன முன்னிலைப் புறமொழி வாய்ப்பு நல்குகிறது. நிலவைப் பார்க்கிறாள். ஏன் இந்த நிலவு இவ்வளவு நேரம் காய்கிறது. இந்நிலவு என்று போய், பகல் வர? இந்த களவு முடிந்து என்று நாம் மணம் புரிய?! " நீண்ட நெடிய வெண்ணிலவே !! புலி போல் இருக்கும் இப்பாறை கண்டு என் தலைவன் அஞ்சலாம்.இங்குள்ள மக்கள் எம்மைக் கண்டுவிட்டால் யாம் என்ன செய்வது? ஆக நிலவே நீ காய்வது நன்றன்று எனக்கூறி, தலைவன் களவு விடுத்து, மணம் புரிய ஆயத்தங்கள் செய்ய வேண்டுமென எடுத்துரைக்கிறாள்.
காற்று வெளியிடை - குறிஞ்சித்திணைக் காதல். வைரமுத்து குறுந்தொகை குறிஞ்சித்திணைப் பாடல்களில் எவ்வளவு சரியாக இப்பாடலைத் தழுவி, எழுதியுள்ளார் !!
முன்னிலைப் புறமொழி இங்கு தலைவனின் வாய்மொழியில்!
நிலவிடம் கதைத்து, பின் மலரிடம் உரையாடும் வரிகள் அவ்வளவு அருமை.

மலர் என்ற நிலைவிட்டு பூத்திருந்தாய்..
மனம் கொள்ள காத்திருந்தேன்! 
மகரந்தம் தேடி நுகரும் முன்னே.. 
வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்!

அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை
நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
முகை - நனை முத்தாகும் நிலை
மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
மொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு
போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
மலர் - மலரும் பூ
பூ - பூத்த மலர்
வீ - உதிரும் பூ
பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

பெண்களின் பருவங்கள் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்

முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே..
முகம் தொட காத்திருந்தேன்! 
மலர் என்ற நிலைவிட்டு பூத்திருந்தாய்..
மனம் கொள்ள காத்திருந்தேன்! 

தலைவி ஏற்கெனவே நாயகனை அறிந்துள்ளாள். காதல் அல்லாத ஒரு ஈர்ப்பு (அரும்பு).

தலைவனைக்காணப்போகிறோம் என்ற ஆர்வத்தில் அரும்பு நனையாகிறது (வான் வருவான் பாடல் வரிகள் லீலா வரும் வழியில்!!)

தலைவன், தலைவி பழகும் நிலை, காதல் அல்லாத, ஒருவரை ஒருவர் ஈர்க்க வழி தேடும் நிலை, நனை முகையாகிறது.

மொக்குள். நறுமணத்தை உள்ளடக்கி வெளிவிடமுடியாமல் திணறும் நிலை. காதலை உள்ளடக்கி வெளிக்கூறவியலாத ஒரு அழகிய மூச்சுத்திணறல்!!

அடுத்த நிலை, மணம் வெளிப்பரவும் இடம்.பனிசூழ் குறிஞ்சி மலைப்பிரதேசத்தில் முகிழ்!!!

மகரந்தம் தேடி நுகரும் முன்னே.. 
வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்!


இப்படி ஒவ்வொரு நிலையாகக்கடந்து, பூத்த மலர் என்ற நிலைக்கருகே வருகையில், பிணக்கு ஏற்படுகிறது. காரணம் தலைவன். வெயில் காடு என்பது தலைவன் தன்னை வஞ்சித்துச் சொல்லிக்கொள்கிறான்.

சங்ககால தலைவியிம் பாடல் முழுவதுமாகத் தலைவனிடம்!! காற்றில் மலர்களுதிர, மண்டியிடுகிறான் !!

“மலர்கொண்ட பெண்மை வாராது போனால் மலைமீது தீக்குளிப்பேன்”
“பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை”


இந்த வரிசையில் மற்றுமொரு குறிஞ்சிக்காதல் !!!

Friday, September 12, 2014

காவல் கோட்டம்


ஒரு நூலுக்கு விமர்சனம் அல்லது ஒரு திரைப்படத்திற்கு விமர்சனம் என்பது இக்காலத்தில் மிக பிரபலமாக மாறிவிட்டது. வலைப்பதிவு பலபேர் கண்களில் விழ வேண்டுமா? எதனையாவது விமர்சிக்கவும் என்பது பதிலாக உள்ளது. விமர்சனம் என்பது ஒருவருடைய தனிப்பட்டக் கருத்து மட்டுமேயென்பேன் நான். ஒரு நூலையோ அல்லது திரைப்படத்தையோ விமர்சிப்பதில் எத்தவறும் இல்லை. ஒத்தக்கருத்துடையவர்கள் வாசித்துப் பலன் பெறலாம். ஆனால் விமர்சனம் என்னும் பெயரில் குறைகளை மட்டுமே தேடித் தேடி வசை பொழிதல் அவசியம் அல்ல‌, அநாகரிகம். குறைகள் இல்லாத மனிதன் இல்லை. மனிதனின் தேடல், அறிவு, ஆராய்ச்சி இதன்மூலம் வெளிப்படும் எந்தவொரு படைப்புமே உன்னதம் தான். எல்லா படைப்புகளையும் ருசிப்போம். நிறைகளைப் பாராட்டுவோம். குறையென நம் மனதிற்குத் தோன்றியதை சுட்டிக்காட்டலாம். அடுத்தவருக்கு அதே குறை நிறையாகத் தோன்றலாம். படைப்பாளியின் மனத்திற்கு இக்குறை குறையாகத் தோன்றினால், அடுத்த படைப்புகளில் மாற்றம் காண்போம். அதைவிடுத்து, அவரை புறக்கணிப்பது அவசியமல்ல என்பது என் கருத்து. மேலும், ஒரு படைப்பாளி, ஒரு விமர்சனத்தை வாசிக்கும் பொழுது, விமர்சகரின் தனிப்பட்டக் கருத்தை மனதார ஏற்றால், உணர்ந்தால், மாற்றம் தன்னால் வரும் அவரது அடுத்த படைப்பில். பல விமர்சனங்கள் சுட்டிக் காட்டியதால், அவரால் ஏற்றுக் கொள்ள முடியாவிடினும், மாறுதல் கொண்டுவருதல் போலித்தனம். வியாபாரமாகிவிடுகிறது கலை இங்கே !!! நான் விமர்சனங்கள் எழுதிப் பழக்கப்பட்டவள் அல்ல. ஆனால் விமர்சனங்கள் படிப்பதுண்டு. அதைப்பற்றியே பேசி, விவாதம் புரிந்து, நேரம் செலவிடுதல் எனக்குப் பிடிக்காத ஒன்று.
நிற்க!!!
kaval kottam book
காவல் கோட்டம்
காவல் கோட்டம். 2011ல் சாகித்திய அகாதமி விருது வாங்கிய நூல். இப்படைப்பை வாசிக்க வாய்ப்பு இப்பொழுது தான் அமைந்தது. இதனைப்பற்றி ஒரு வலைப்பதிவு எழுதலாம் எனத் தோன்றியபோது, விமர்சனம் பற்றிய எனதுக் கருத்தையும் இணைத்துக்கொண்டேன். இப்போது, வலைப்பதிவைத் துவங்கலாம். ஒரு படைப்பை வாசிக்க, எந்தவொரு முன் அனுமானங்களுடன் துவங்க வேண்டியது அவசியமில்லை. மற்றவர் கருத்துகளைப் படிப்பதற்கு முன்பே, படைப்பைப் படித்து விட வேண்டும். அப்போது தான், நமக்கு அதன்மீது என்ன கருத்து என்பது தெளிவுற விளங்கும்.

காவல் கோட்டம் மதுரையைப் பிண்ணனியாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நூல். எதற்காகக் காவல் கோட்டம் என்று பெயர் என்பது ஆரம்பத்தில் எனக்குப் புரியவில்லை. ஒட்டுமொத்த வரலாற்றைச் சொல்லும் மிகப்பெரும் புத்தகம் என்றுதான் நினைத்தேன்.

மாலிக் கபூர் படையெடுப்பில் ஆரம்பிக்கின்றது புத்தகத்திலுள்ள வரலாறு. ஆறு நூற்றாண்டுகால வரலாறு என்பதால், முக்கிய நிகழ்வுகள் வரலாற்றுப்பதிவாக பிண்ணனியில் நிற்கின்றது. சிறிது சிறிதாகப் புரிகிறது.. ஆறு நூற்றாண்டுகால கள்ளர் நாயக்கர் வரலாற்றைக் கூறு போட்டு விளக்க முற்படுகிறார் ஆசிரியரென்பது.

இப்புத்தகத்தைப் பருக ஆரம்பித்தால், இடைவிடாது வாசித்து முடித்துவிட வேண்டுமென்பேன் நான். முதலில் 50 பக்கங்கள் தாண்டுவதற்குள் பல வருடங்கள் கடந்துவிட்டதோ எனத் தோன்றியது. கதையும் கற்பனையும் சேர்ந்த வரலாற்றைப் படித்துப் படித்துப் பழக்கப்பட்டுவிட்டது நமக்கு. வரலாறு கசப்பு என்ற எண்ணம் ஆழ்மனத்தில் அனைவருக்கும் உள்ளதால் தானே இனிப்புடன் அளித்தால் ஆசையாக அள்ளுகிறோம்? காவல் கோட்டம் வரலாற்றை வரலாறாகவேச் சொல்கிறது. வேலைப்பளு காரணத்தால், இடையில் வாசிப்பதை நிறுத்திவிட்டேன். பின்பு ஒரு மாதம் கழித்து மறுபடியும் துவங்கினேன்.
ஆறு நூற்றாண்டுகால மதுரையில், பல்வேறு சரித்திர நிகழ்வுகளுக்கு இடையே கள்ளர் பரம்பரை ஆரம்பிக்கின்றது. கொல்லவாரு சமூகம் சொல்லும் வரலாறு மறுபுறம். சடச்சி, கங்காதேவி என்ற இரு பெண்களின் வாயிலாக, இருவேறு சமூகவரலாறு மதுரையில் கால் வைக்கின்றது. பெண்களின் வீரம், ஆளுமைத்திறன் இவற்றைக் கொண்டே இருபெரும் இனக்குழுக்கள் விதையைத் துளைத்து எழுந்துள்ளன.

ஒருபுறம் சடச்சி. "காப்பாத்து.. இல்லேன்னா சாகு" என்று கணவனை எழுப்பும் மறக்கர்ப்பிணியாக அறிமுகமாகிறாள். தனியாளாக பிள்ளைபெற்று, காய்ந்த மொச்சைச்செடியை மெத்தையாக மாற்றி குழந்தை வளர்த்து அவள் மூலம் கள்ளர் சமூகம் உயிர்பெற, மகன் வழித் தோன்றல்களினால் குலக்கதை வாரிசுகளைச் சென்று சேர்வதில்லை. பின்பு மருமகள்கள் மூலமாக குலம் மூலக்கதை அறிந்து வளர்கிறது.மறுபுறம், கங்கா தேவி மதுரை வருகிறாள். விஜயநகர பேரரசு சுல்தானை சாய்க்க நினைக்க, களப்பலியாகிறாள் கனகநுகா. குமாரகம்பணை இயக்குகிறாள். 'மதுரா விஜயம்' ஈன்றெடுக்கிறாள்.
அப்படியே நாயக்கர் கால படையெடுப்புகள், மன்னர்கள் என விரிவடைகின்றது புத்தகம். சாளுவக்கட்டாரி கள்ளர்களுக்கு அளிக்கப்பட்டு, காவல் உரிமை கிடைக்கிறது. இவை முதல் 300 பக்கங்களுக்குள் முடிந்துவிடுகின்றது. பின்பு, ஆங்கிலேயர் வருகை. களவும் காவலும் தொழிலாகக் கொண்ட தாதனூர் கள்ளர்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை சடச்சிப் பொட்டலிலிருந்து விரிகின்றது.

அக்கால மன்னர்களைவிட அடக்குமுறைக்கு தமிழ்நாட்டை ஆளாக்கியது நாயக்கர் கால படையெடுப்புத்தானோ எனத் தோன்றுகிறது. வாழ்க்கையின் அனைத்து அடுக்குகளிலும் தெலுங்கு மக்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றனர். ஆனாலும், பல்வேறு வளர்ச்சிப்பணிகள். தரிசாகக்கிடந்த கம்பம் பகுதியில், கன்னட ஒக்கலிகர்களை அமர்த்தி, விவசாயம் துவங்குகின்றனர் நாயக்கர். மதுரைக்கு மீனாட்சி மறுபடியும் வருகை அளித்து, கிளிகளினூடே கோவிலுள் செல்கிறாள். இப்படிப் பற்பல. மக்கள் பண்பாட்டு முறைகளை மாற்றிக் கொள்கின்றனர். ஆனால், காவல் கோட்டத்தில், நாயக்கர்களின் ஆதிக்கத்தை விட, உபயோகமான பணிகள் பேசப்படுகின்றன. நாயக்க மன்னர்கள் கதாநாயகர்கள் ஆகின்றனர்.

கள்ளர்கள் களவு மற்றும் காவல். பல்வேறு காவல் வகைகள். காவல் கூலி வாங்கப்படுகிறது. கூலி தராதவர் இடங்களில், காவல் புரியும் இனமே களவும் புரிகின்றது. மக்கள் தாதனூர் கள்ளர்களின் வீரத்தில், கன்னம் போடும் திறமையில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். காவல் கூலிக்கு எதிராக யாரும் நிற்பதில்லை.

வரலாறு என்பதை வரலாறாகவே அளித்துள்ளார் ஆசிரியர். இது சரியா? ஏன் இப்படி நடந்துள்ளது என்று பல கேள்விகள் எழுகின்றன. ஆனால் காவல் கோட்டம் இவற்றிற்குப் பதில் சொல்லும் நூலல்ல. இப்படி ஒரு வாழ்க்கைமுறை இருந்துள்ளது என்பதை உயிர்துடிப்புடன் கூறுகிறது.
ஆங்கிலேயரின் வருகைக்குப்பிறகு கதையின் போக்கு வேகம் அடைகிறது. கள்ளர்களின் காவல் மற்றும் களவை ஒடுக்க நினைக்கும் காலனி ஆதிக்கத்தின் திட்டமும், தாதனூர்க்காரர்களின் பதிலடியும் வரிசையாக வருகின்றன. காவலும் புரிந்து, களவும் செய்தாலும், அம்மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை படிப்பவர்களுக்கு கள்ளர்களின் மேல் ஒரு பாசம் வரவழைக்கின்றது. தங்கள் இனம் செய்யும் தொழிலால் சமூகத்திற்கு என்ன பலனென்றெல்லாம் நினைக்காத மக்கள், உள்ளுக்குள் எவ்வளவு ஈரம் பொருந்தியவர்களாக இருக்கின்றனர் என்பதை உணர்கிறோம். சின்னானை பலி கொடுக்க சம்மதித்துவிட்டு துக்கத்தில் ஊரே கிடக்கும்போது, தண்டட்டி வளர்க்க வந்தவன்மீது பாசம் பொழிந்து, பின்பு அவன் தாதனூரிலியே களவாட, உறையும் மக்கள், களவு புரியச்செல்லும் இடத்தில் தற்கொலையைப் பார்த்து விட்டுத் வெறுங்கையோடு திரும்புதல் என நீள்கிறது பட்டியல்.
அடக்க அடக்க சிலிர்த்து எழும் வெள்ளந்தி மக்கள். முழு ஊரும் அழிந்து வேறு தொழிலும் அறியாதவர்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். பெரியாறு அணையின் பக்கம் வாழ்வாதாரமான காடுகளை அழிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களை இவர்கள் போக்கிலேயே விட்டு அல்லது, முழுமையான காவல் பொறுப்பை அளித்து, களவை ஒழிக்க ஏன் யாருமே வகை செய்யவில்லை என வினா எழுகின்றது. ஆங்கிலேயர் கச்சேரி ஆரம்பிக்கின்றனர்(கச்சேரி - இன்றைய காவல் நிலையம்). பல நலத்திட்டங்கள். ஆனால் எதுவும் மக்கள் நலனுக்காக அல்ல. அடக்குமுறைக்காக. தாது வருடப் பஞ்சம் வருகின்றது. மக்கள் கொத்துக் கொத்தாக மடிகின்றனர். கிறுத்துவப் பள்ளிகள் அனாதை குழந்தைகளை எடுத்து மதமாற்றம் செய்கின்றனர். தாதனூர் பையன் டேவிட் ஆக மாறி, பின்பு இறக்கும் தருவாயில் வருந்தி அவர் எழுதிய நாட்குறிப்புகள், தேக்கடியில் தேவாலயம் கட்ட வரும் பாதிரியார் என இவர்களின் பங்களிப்பு மிக்க நன்று. அனைத்து மதமும் நல்வழிதான். மனிதர்கள்தான் மதம் பிடித்து அலைகின்றனர் என்பதை இவர்கள் மூலம் கூறியுள்ளார் ஆசிரியர்.

மேலும் பல்வெறு குறிப்புகள் உள்ளன. மதுரைக் கோட்டை இடிபடும்போது சாமிகள் இறங்கி வருவது மிக நுட்பமாக உள்ளது. ஒரு பாரம்பரியத் தொடர்ச்சி எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கின்றது, அது ஒரே நாளின் வீழும்போது மக்கள் மனநிலை எனக் கச்சிதம்.

பாரம்பரியத் தொடர்ச்சி அழியும்போது, ஒரு இனமே அழிகின்றது, ஒரு ஊரே அழிகின்றது. பண்பாடு சிதைகின்றது. முற்போக்குச்சிந்தனை அவசியம். ஆனால், பாரம்பரியத்தை அழிக்காமல், அதனூடே மக்களைப் புரிந்துகொள்ளச் செய்யும் வழி இல்லாமல், களவு முழுமையாக அழிக்கப்படத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகின்றது. களவின் நுட்பங்களறியாமல் காவல் காக்கும் கச்சேரிப் போலீசார் திணறுகின்றனர். மண் பெற்றெடுத்த மக்களுக்கு உரிமை மறுக்கப்படுகின்றது.

Author
ஆசிரியர் சு.வெங்கடேசன்
ஆசிரியர் சு.வெங்கடேசன். 10 ஆண்டுகால முயற்சியினால் சாத்தியமாக்கியிருக்கிறார் இப்படைப்பை. "கதை அறுந்துபோனால் ஊர் அறுந்துபோகும். ஊரும் கதையும் வேறல்ல, கதையும் உயிரும் வேறல்ல" என்கிறார். "தாயைப் புதைத்த மகனும் மகனைப் புதைத்த தந்தையும் எல்லோரையும் புதைத்த மருமகளும் நின்று வடிக்க சொட்டுக் கண்ணீரும் நேரமும் இன்றிக் கூட்டத்தைத் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தனர்" என்று தாது வருடப் பஞ்சத்தை எழுதிய பக்கங்களில் வலி தெரிகின்றது. கள்ளர் நாயக்கர் மக்களின் கதையினூடே பலப்பல செய்திகள், ஒரு தாசி ஊருக்கே உணவளித்து உயிர்விடுகிறாள். தாழ்த்தப்பட்டவர்கள் படிக்கும் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க மறுக்கும் மக்கள். பெண்களின் ஆளுமை இருக்கவே, பெண்களின் அனுமதி இல்லாமல் வயதானவருடன் திருமணம். உடன்கட்டை ஏற விழையும் பெண், உடன்கட்டை ஏற மறுக்கும் மங்கம்மா. ஊர் பெரியாம்பளையின் தலைமையில் ஒற்றுமையாக மக்கள். கச்சேரி கட்ட வரும் வெள்ளையர்களிடம் காணிக்கை கட்டிவிட்டு வேலை ஆரம்பிக்கச் சொல்லும் வெள்ளந்திக் கூட்டம். மண்ணின் கதை இது. மண் தான் கதை சொல்கிறது. இரண்டு சமூகத்தின் வரலாற்றுக்குள் இவ்வளவு இருக்குமென்றால், எத்தனைப் பழம்பெரும் சமூகம் உள்ளது? தமிழன் ஆக்கிரமிப்புகளிலும், அடக்குமுறையிலும் வாழ்ந்து பழக்கப்பட்டவனாக ஆக, பாரம்பரியத்தை இழந்திருக்கின்றான். இப்போது பாரம்பரியத்திற்கான விளக்கமாக நாம் புரிந்து கொள்வது, உண்மையா இல்லைத் துப்பாக்கி முனையில் திணிக்கப்பட்டதா என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

காவல் கோட்டம் - பிழைகள் இருக்கலாம். ஆனால் அதை மீறிய ஒரு வசீகரத்துவம் உள்ளது. இலக்கிய விவாதங்களுக்குள் செலுத்தாமல், சாமானியன் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு புத்தகம்.