Showing posts with label inner teachings. Show all posts
Showing posts with label inner teachings. Show all posts

Thursday, September 13, 2018

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் !!!



பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் !!!

இன்று விநாயகர் சதுர்த்தி - மூலாதாரக் கடவுள் விநாயகர் பிறந்ததை சிறப்பிக்கும் பண்டிகை.

மற்ற எந்தக் கடவுளுக்குமில்லாமல், விநாயகருக்கு ஏன் இந்தத் தனிச் சிறப்பு?

விநாயகரின் உருவம் ஏன் இப்படி உள்ளது?

நமது இந்து மதத்தில் பல கடவுளின் உருவங்கள் வழிபாட்டுக்கு இருக்க, ஏன் கணேசனுக்குத் தனிப் பெருமை?

இந்தக் கேள்விகள் எழுந்துள்ளதா என்றாவது?
சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

பிள்ளையாரின் வரலாறு தான் என்ன?

அம்மை பார்வதி, தான் குளிக்கையில் தனது வியர்வையால், ஒரு மகனை உருவாக்குகிறாள். அவனைக் காவலுக்கு இருத்துகிறாள். பார்வதியைத் தேடி சிவபெருமான் வருகையில், இம்மகன் உள்ளே செல்லவிடாமல் தடுக்கிறான். சிவன் அவனது தலையைக் கொய்கிறார். பின்பு, சாந்தமடைந்து, யானைத் தலையை வரமளிக்கிறார்.

இதுவே நம் புராணங்களின் கதை. அவ்வளவுதானா
அதெப்படி வியர்வையினால் மகனை உருவாக்க முடியும்? சிவபெருமான் கடவுள் அல்லவா? பிறகு ஏன் மகனின் தலை கொய்தார்
அவர் நினைத்தால், மறுபடியும் பழைய தலையையே அளித்திருக்க முடியுமே !! ஏன் யானையின் தலை? ஒரு சிறுவன் அவ்வளவு பெரிய யானைத் தலையை வைத்துக் கொண்டு என்ன செய்வான்?

இந்தக் கேள்விகள் உங்களுக்குள் எழுந்திருக்கிறதா
ஏன் இவ்வாறு ஒரு விடயம் கூறப்பட்டது என ஆராய்ந்ததுண்டா?

நமது புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் எழுதப்பட்டதன் நோக்கம் ஒன்றே. 'நான்' என்பதறிதல்.
"பன்றிக்கு முன் முத்துக்களை இறைக்காதீர்கள்" என்றொரு பழமொழி உண்டு. அதன்படி, உள்ளர்த்தம் நிரம்ப நிரம்ப கதைகள் ஆயிரக்கணக்கில் நமக்குத் தரப்பட்டன. உள்ளர்த்தத்தின் தேடல் இருப்பவர்களுக்கு இவை பொக்கிஷம். மற்றவருக்கு, வெறும் கதைகள்.

சிவன் என்பது தெய்வீக ஆற்றலைக் குறிக்கும் ஒளி. (தீமைகளை) அழிக்கும் கடவுள். ஓர் உயிருக்கு, ஆன்மீக ஒளி நல்கி நல்வழிப்படுத்துவது சிவனின் சக்தி. உடலைக் குறிப்பது அம்மை பார்வதி. ஓர் உடலில், தெய்வீக ஒளி இறங்குகையிலேயே அவ்வுடல் சுத்தமாகிறது. இப்பிறப்பின் நோக்கங்கள் அறிகிறது.
சிவனின் துணையின்றி, பார்வதி(உடல்) உருவாக்கியது பிள்ளையார். ஆகவே, பிள்ளையார் தெய்வீக ஒளி துளியும் இல்லாத உடலின் உருவகம். இந்த உடலைப் புனிதப்படுத்த தெய்வீக சக்தியானது அவசியம். சிவன் வருகையில், அதாவது, தெய்வீக சக்தி உள்நுழைகையில், இந்த உருவகமானது அதனைத் தடுக்கிறது. தடுக்கின்றவற்றை, தவறானவற்றை அழிப்பதற்குத் தானே சிவ பெருமான்? தலை துண்டிப்பு என்ற தண்டனை. அறியாமைத் தலைக்கேற இருப்பதை சுத்தம் செய்யும் வழி.

ஆக, தெய்வீக சக்தி உள்நுழைந்தாயிற்று. பிறவிப் பயன் அடைந்தாயிற்று. ஆனால் ஏன் யானைத் தலை தரப்பட்டது?
பண்டைய புராணங்களில், மூலாதாரச் சக்கரத்திற்கு யானையே சின்னம். ஆன்மீக அனுபவமடைந்து, சமாதி நிலை அடைய, யோகிகள் கூறுவது, குண்டலினி எழுப்புதல். குண்டலினி சக்தியானது இருக்குமிடம் மூலாதாரம். தலைக்குள் நுழையும் தெய்வீக சக்தி, மூலாதாரத்தை அடைந்து, குண்டலினியை மேலெழுப்ப, அம்மனிதன் மிகுந்த திறமை வாய்ந்த, புத்திக்கூர்மையுடைய, வெற்றி காணும் மனிதனாகிறான். மூலாதாரம் மூலமாக, குண்டலினி எழுப்பிச் சிறந்ததால், யானைத் தலை அளித்ததாக நமக்குச் சொல்லப்பட்டது.

குண்டலினி அனைத்து உருவங்களிலுமே பாம்பு வடிவில் குறிக்கப்பட்டுள்ளது. ஆன்மீக முதிர்ச்சியடைந்தவர்கள் எழுப்பப்பட்ட குண்டலினியை நாபியில் சேமிக்கிறார்கள் - விநாயகரின் பெரிய வயிறு(அதிக தெய்வீக சக்தி சேமித்து வைக்கப் பட்டுள்ளது), அதனைச் சுற்றியுள்ள பாம்பு(குண்டலினி சக்தி).

ஓர் உடைந்த தந்தம் - யானைத் தலையுடன், மிக வலிமையான, சிறந்த படைப்பாகத் தான் இருந்தாலும், அகங்காரத்தினால், மற்றவருக்குத் தீங்கு இழைக்காமல் இருக்க வேண்டுமென்ற குணத்தைக் கூறுகிறது.

இதனை அடித்தளமாகக் கொண்டு, மற்ற வினாக்களுக்கு விடை தேடுங்கள். தேடுபவருக்கே நல்முத்துக்கள் கிடைக்கும் !

இதே கருத்துக் கூற முயற்சிக்கும் என் மற்ற பதிவுகள்



தேடல் செய்யத் தூண்டியது - பிராணசிகிச்சை வகுப்புகள் (GMCKS Pranic Healing Classes), முக்கியமாக, “Inner Teachings of Hinduism Revealed” என்ற வகுப்பு.


Friday, June 3, 2016

ஆத்மா - அகலிகை!!!

"நீ கல்லாகக் கடவாய்"

அகலிகை விக்கித்து நின்றாள். கெளதமர் கண்ணில் தீப்பொறி. இந்திரனின் தவறால் சாபம் பெற்றவள் கல்லாகக் கடவதா? பெண் என்பவளுக்கு எக்காலத்திலும் தீர்ப்பு வழங்கிவிட்டு, அதன் பின் தானே வழக்காடு நடத்தப்படுகிறது!!!

"ஐயனே .....!!!" பாதம் பற்றுகிறாள் அகலிகை. தீ விழி மான் விழியை உற்று நோக்குகிறது. மன்னிப்பு மனித பண்பாடு என்பதை மறந்த நெஞ்சம் சாப விமோசனம் அளிக்கிறது. "தசரத மைந்தன் வருவான். அவன் காலடித் தூசி பட நீ விமோசனம் அடைவாய்"

அகலிகை, கூப்பிய கரங்களுடன் கல்லானாள்....

நாட்கள் செல்ல, அந்நாளும் வருகிறது. ராமனின் கால் தூசி அகலிகை மீது படர்கிறது. உருவம் பெற்ற அகலிகை கண்டு, அவள் வரலாறு கேட்டறிகிறார் விசுவாமித்திரரிடம்.


தவறு புரிந்து பின் திருந்துபவரையே மன்னித்தல் அவசியமாகிறது. நெஞ்சில் பிழை இல்லா இல்லாளை கல்லாக்கியது எவ்வகையிலும் சரியில்லை என்ற ராமன் கெளதமரிடம் சேர்ப்பிக்கிறான் அகலிகையை.

அகலிகை வரலாறு கேட்டவுடன் என்ன தோன்றும்?

"என்ன இருந்தாலும் ஆணுக்குப் பெண் நிகராக முடியுமா? இந்திரனுக்கும் கணவனுக்கும் வேறுபாடு அறியா அகலிகைக்கு சாபம் என்பது, பெண் குலத்திற்கு ஒரு பாடம்..."

"இது என்ன நியாயம்? மனதால் தவறிழைக்காதவளைத் தண்டித்தல் தகுமா? இதே தவறைக் கெளதமன் இழைத்திருந்தால்?? அகலிகை சபித்திருப்பாளா?"

"ராமனுக்குத் தான் என்ன குணம்? அகலிகை மீது பரிவு கொண்ட ராமன் சீதைக்கு அக்னிப்பிரவேசம் அளித்து விட்டானே!!!"

இப்படிப் பல எண்ணங்கள். பல விவாதங்கள். பட்டிமன்றங்கள். "ராமன் செய்தது சரியா பிழையா"

உண்மையில் இதற்காகவா கம்பன் காப்பியத்தைப் படைத்தார்? இதற்காகவா ராமாயணம் உலகம் போற்றப்படுகிறது? ராமன் செய்த்து பிழை என்று வாதிடுவதால், காப்பியத்தை மாற்ற இயலுமோ?

காப்பிய நூல்களின் அர்த்தச் செறிவு அளப்பரியது.மன்னனின் வாழ்கையோ, போரின் விதமோ எதுவாயினும் பல தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் இதனை வரலாறாகவே அளிக்கலாமே. காப்பியமாக ஏன் போற்றுகிறோம். தரும நெறி தவறாமல் ராமன் வாழ்ந்ததாலா? இல்லை, அக்கினிப்பிரவேசம் செய்த சீதையினாலா?

இவ்வனைத்துக் காரணங்களுக்கும் மேலாக உள்ளது நம் வாழ்வு நெறி. இப்புவி வாழ்வின் நோக்கம். ஆன்ம விளக்கம் !!!

"நான்" என்பது யார்? இந்த வினாவிற்கான விடையே புரியாதளவிற்கு கர்மவினைப் பல உள்ள இடத்தில், காப்பியங்கள் ஆன்ம விளக்கம் தர முற்பட்டன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடுபட்டனர்.

இக்கேள்விக்கு விடை தெரிவதற்கான முயற்சியில் நாம் ஈடுபட ஒரு சிறிய தூண்டுதலே அகலிகை வரலாறு.
ஆத்மாவானது கடவுளின் துகள் எனலாம். பேரொளியாகிய கடவுளின் ஒரு மிகச் சிறிய பகுதி. அவ்வாத்மாவே "நான்". அந்த "நான்" சஞ்சரிக்கும் இடமே சரீரம்.

கடவுளின் மிகச்சிறிய பகுதியான ஆத்மா ஒவ்வொரு முறையும் பிறவி எடுக்கிறது, கர்ம வினையைக் களைய. தன் முழு தீய கர்மங்களைப் போக்க பிறவி எடுக்கும் ஆத்மா, அந்தந்தப் பிறவியில் மேலும் தீய/நல்ல கர்மங்களைப் புரிந்து, அதற்கேற்ப மீண்டும் மீண்டும் பிறக்கிறது.

தவறு இழைக்கும் ஒரு ஆத்மா, தான் கடவுளின் ஒரு பகுதி எனத் தெரியாமல், அறியாமையில் தவிக்கிறது.

"நான் யார்?" என்ற வினாவின் விடையறிந்து, அதனையொட்டி வாழுகையில், கடவுளின் தொடர்பு அதிகரிக்கிறது.

இதனை அந்தகர்ணம்/spiritual cord... என்று பல்வேறு பெயர்களிடுகிறோம்.
கடவுளின் அருள் நிறைய நிறைய ஞானம் கிடைக்கிறது.

இந்த உண்மையே அனைத்து காப்பியங்களிலும் கதை வடிவில், வரலாறு வடிவில் வியாபித்துக் கிடக்கிறது. இதன் மூலம் ஆத்மா முன்னேறுவதற்கான வழி செய்யப்பட்டுள்ளது.

அகலிகை குறிப்பது நான்/நாம்/ஆத்மா/The Soul.

அகலிகை("நான்/ஆத்மா") தவறிழைப்பது அறியாமையால். அறியாமை இருளில் தவிக்கும் அகலிகைக்குத் தன் தீய கர்மவினையின் பலன் தண்டனையாக வருகிறது

கடவுளின் அருள் அவளை எட்டும்போது (ராமனின் வருகை) அவள் தன் உண்மை நிலை அடைகிறாள்(ஞானம் பெறுதல்).

இதே உண்மையை பல நூல்களில் நாம் உணரலாம். இது ஒரு சிறிய பகுதி.
காப்பியங்கள் கூறும் வெளிப்படையான கருத்துக்களோ வாழ்கை நெறிகளோ அனைவருக்கும் உகந்தது. அதனோடு இயைந்தவாறு, காப்பியங்களின் உள்ளர்த்தமும் புரிகையில், ஆனந்தம் அளவிட முடியாததாகிறது.


மேலும் தேடலாம் !!!