Showing posts with label hinduism. Show all posts
Showing posts with label hinduism. Show all posts

Thursday, September 13, 2018

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் !!!



பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் !!!

இன்று விநாயகர் சதுர்த்தி - மூலாதாரக் கடவுள் விநாயகர் பிறந்ததை சிறப்பிக்கும் பண்டிகை.

மற்ற எந்தக் கடவுளுக்குமில்லாமல், விநாயகருக்கு ஏன் இந்தத் தனிச் சிறப்பு?

விநாயகரின் உருவம் ஏன் இப்படி உள்ளது?

நமது இந்து மதத்தில் பல கடவுளின் உருவங்கள் வழிபாட்டுக்கு இருக்க, ஏன் கணேசனுக்குத் தனிப் பெருமை?

இந்தக் கேள்விகள் எழுந்துள்ளதா என்றாவது?
சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

பிள்ளையாரின் வரலாறு தான் என்ன?

அம்மை பார்வதி, தான் குளிக்கையில் தனது வியர்வையால், ஒரு மகனை உருவாக்குகிறாள். அவனைக் காவலுக்கு இருத்துகிறாள். பார்வதியைத் தேடி சிவபெருமான் வருகையில், இம்மகன் உள்ளே செல்லவிடாமல் தடுக்கிறான். சிவன் அவனது தலையைக் கொய்கிறார். பின்பு, சாந்தமடைந்து, யானைத் தலையை வரமளிக்கிறார்.

இதுவே நம் புராணங்களின் கதை. அவ்வளவுதானா
அதெப்படி வியர்வையினால் மகனை உருவாக்க முடியும்? சிவபெருமான் கடவுள் அல்லவா? பிறகு ஏன் மகனின் தலை கொய்தார்
அவர் நினைத்தால், மறுபடியும் பழைய தலையையே அளித்திருக்க முடியுமே !! ஏன் யானையின் தலை? ஒரு சிறுவன் அவ்வளவு பெரிய யானைத் தலையை வைத்துக் கொண்டு என்ன செய்வான்?

இந்தக் கேள்விகள் உங்களுக்குள் எழுந்திருக்கிறதா
ஏன் இவ்வாறு ஒரு விடயம் கூறப்பட்டது என ஆராய்ந்ததுண்டா?

நமது புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் எழுதப்பட்டதன் நோக்கம் ஒன்றே. 'நான்' என்பதறிதல்.
"பன்றிக்கு முன் முத்துக்களை இறைக்காதீர்கள்" என்றொரு பழமொழி உண்டு. அதன்படி, உள்ளர்த்தம் நிரம்ப நிரம்ப கதைகள் ஆயிரக்கணக்கில் நமக்குத் தரப்பட்டன. உள்ளர்த்தத்தின் தேடல் இருப்பவர்களுக்கு இவை பொக்கிஷம். மற்றவருக்கு, வெறும் கதைகள்.

சிவன் என்பது தெய்வீக ஆற்றலைக் குறிக்கும் ஒளி. (தீமைகளை) அழிக்கும் கடவுள். ஓர் உயிருக்கு, ஆன்மீக ஒளி நல்கி நல்வழிப்படுத்துவது சிவனின் சக்தி. உடலைக் குறிப்பது அம்மை பார்வதி. ஓர் உடலில், தெய்வீக ஒளி இறங்குகையிலேயே அவ்வுடல் சுத்தமாகிறது. இப்பிறப்பின் நோக்கங்கள் அறிகிறது.
சிவனின் துணையின்றி, பார்வதி(உடல்) உருவாக்கியது பிள்ளையார். ஆகவே, பிள்ளையார் தெய்வீக ஒளி துளியும் இல்லாத உடலின் உருவகம். இந்த உடலைப் புனிதப்படுத்த தெய்வீக சக்தியானது அவசியம். சிவன் வருகையில், அதாவது, தெய்வீக சக்தி உள்நுழைகையில், இந்த உருவகமானது அதனைத் தடுக்கிறது. தடுக்கின்றவற்றை, தவறானவற்றை அழிப்பதற்குத் தானே சிவ பெருமான்? தலை துண்டிப்பு என்ற தண்டனை. அறியாமைத் தலைக்கேற இருப்பதை சுத்தம் செய்யும் வழி.

ஆக, தெய்வீக சக்தி உள்நுழைந்தாயிற்று. பிறவிப் பயன் அடைந்தாயிற்று. ஆனால் ஏன் யானைத் தலை தரப்பட்டது?
பண்டைய புராணங்களில், மூலாதாரச் சக்கரத்திற்கு யானையே சின்னம். ஆன்மீக அனுபவமடைந்து, சமாதி நிலை அடைய, யோகிகள் கூறுவது, குண்டலினி எழுப்புதல். குண்டலினி சக்தியானது இருக்குமிடம் மூலாதாரம். தலைக்குள் நுழையும் தெய்வீக சக்தி, மூலாதாரத்தை அடைந்து, குண்டலினியை மேலெழுப்ப, அம்மனிதன் மிகுந்த திறமை வாய்ந்த, புத்திக்கூர்மையுடைய, வெற்றி காணும் மனிதனாகிறான். மூலாதாரம் மூலமாக, குண்டலினி எழுப்பிச் சிறந்ததால், யானைத் தலை அளித்ததாக நமக்குச் சொல்லப்பட்டது.

குண்டலினி அனைத்து உருவங்களிலுமே பாம்பு வடிவில் குறிக்கப்பட்டுள்ளது. ஆன்மீக முதிர்ச்சியடைந்தவர்கள் எழுப்பப்பட்ட குண்டலினியை நாபியில் சேமிக்கிறார்கள் - விநாயகரின் பெரிய வயிறு(அதிக தெய்வீக சக்தி சேமித்து வைக்கப் பட்டுள்ளது), அதனைச் சுற்றியுள்ள பாம்பு(குண்டலினி சக்தி).

ஓர் உடைந்த தந்தம் - யானைத் தலையுடன், மிக வலிமையான, சிறந்த படைப்பாகத் தான் இருந்தாலும், அகங்காரத்தினால், மற்றவருக்குத் தீங்கு இழைக்காமல் இருக்க வேண்டுமென்ற குணத்தைக் கூறுகிறது.

இதனை அடித்தளமாகக் கொண்டு, மற்ற வினாக்களுக்கு விடை தேடுங்கள். தேடுபவருக்கே நல்முத்துக்கள் கிடைக்கும் !

இதே கருத்துக் கூற முயற்சிக்கும் என் மற்ற பதிவுகள்



தேடல் செய்யத் தூண்டியது - பிராணசிகிச்சை வகுப்புகள் (GMCKS Pranic Healing Classes), முக்கியமாக, “Inner Teachings of Hinduism Revealed” என்ற வகுப்பு.