Monday, May 28, 2018

அன்புள்ள உயிரே - full content.

என்னுள்ளுள்ள எனதருமை மைந்தனே,


மகனென்று எவ்வாறு தீர்மானித்தாயென்று கேட்கிறாயா? அது தான் உனக்கும் எனக்கும் உள்ள பந்தம். என்னால் உன்னை உணர முடிகிறது, எப்போதுமே முடியும்.


இதோ இங்கே மடிக்கணினியுடன் அமர்ந்திருக்கிறேன் உன்னிடம் சில உண்மைகளைக் கூற.


ம்ம்ம்.. உனக்கு என்ன பெயர் சூட்டலாம்? அம்மாவின் விருப்பம் அருண்மொழி. அருண்மொழி!! .. எனது விருப்பமென்பதால் நீ இப்பெயர் தாங்க அவசியமில்லை. உனது விருப்பம் அறியும்வரை நீ என் அருண்மொழியாக இருந்தால் போதுமெனக்கு.


அருண் ... இன்று அம்மா ஒரு திரைப்படம் பார்த்தேன். நீயும் செவிமடுத்திருப்பாய்.


“அங்கே நெடுநாட்களாய், தரை தட்டித் தனிமையில் கிடக்கிறது ஓர் ஒற்றைப்படகு. உப்பு நீரால் நிறம் மங்கிக் கிடக்கும் அப்படகோடு என்னையும், என் அம்மாவையும் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்ப்பேன். அந்தப் படகு, காலகாலமாகப் பேச முடியாமல் போன பெண்ணினத்தின் மெளனத்தைப் பேசிக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றும். தொடக்கப் புள்ளியே முற்றுப்புள்ளியாக அமைந்து விடக்கூடாது என்ற கவலையோடு சொல்கிறேன். ரகசியங்களுக்கு இடமில்லாத நம் கடிதங்களை, தேவதைகள் வாசிப்பதாக எண்ணுகிறேன். எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாக எழுதுங்கள். தேவதைகளுக்காக அல்ல, மனிதர்களுக்காக !!!”


சேரனின் "பொக்கிஷம்"


கேட்கும்போதெல்லாம் என்னை உலுக்கும் வாசகங்கள் இவை. உனக்கு ஏதேனும் புரிகிறதா மகனே?


நீ பிறக்கப் போகும் இவ்வுலகில் பலப் பல முரண்பாடுகள் இருக்கின்றன. அவற்றுள் அறிந்தும் அறியாமலும் சிக்கித் தவிக்கும் மக்களாய் உன் அம்மா, அப்பா, அனைவரும். ஏன் நீயும் கூட !!! ஆனால் நான் இந்தக்கடிதத்தை உனக்கு எழுதும் காரணமே, அந்த முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு நீ விளங்க வேண்டுமென்பதே...


என்னென்னவென்று கேட்கிறாயா? ஒரு மடலில் முடிக்கவொண்ணா ஆழியகல வான் நீள பட்டியலது.


நீ உதித்ததும் மெல்ல விளங்க ஆரம்பிக்கும்.


உன்னைக் கையில் ஏந்தியதும் உனக்குக் குரல் கேட்கும். "வாரிசு வந்துவிட்டான்" என்று. "நான் தான் இரண்டாவது குழந்தையாயிற்றே, எனது பெற்றோருக்கு ஏற்கெனவே வாரிசு உண்டே", எனக் குழம்புவாய்.


பின்பு நீ வளர உனக்கு போதிக்கப்படும். நீ ஆண். நீ தான் வாரிசு. நீ தான் உயர்ந்தவன் என்ற கர்வம் மெதுவாக தலைதூக்கும். "ஆண் பிள்ளை அழக் கூடாது" என்பார்கள். இயற்கையான உணர்ச்சி வெளிப்பாடை அடக்குவாய், அதற்குப் பெருமிதமும் கொள்வாய்.


பெரியவனாக நீ மாற, முற்றிலுமாக ஆணென்ற கர்வம் உனது உதிரத்தில் கலந்திருக்கும்.


சாப்பிட்டபின் உன் தட்டில் கைகழுவி எழுந்து போவாய். குளம்பிக் கோப்பை நீ அமர்ந்த நாற்காலிக்குக் கீழ் காத்திருக்கும். உன் அம்மாவோ தமக்கையோ எடுத்துப் போக. அவர்கள் இவ்வாறெல்லாம் செய்வதில்லை என எண்ணிப்பார்த்திருக்க மாட்டாய்.


அம்மா அக்காள் என பாச மழை பொழிவாய். உனக்குத் தேவையான அனைத்தும் உனக்குக் கிடைக்கும். எவ்வாறு கிடைக்கிறது என சிந்திக்க மாட்டாய்.

சில நேரம் வீட்டு வேலைகள் செய்வாய். ஆனால் உன்னைப் பொறுத்தமட்டில், நீ எனக்கு செய்யும் உதவி, அதாவது அவை உன் வேலைகள் அல்ல.


உன் நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டே பெண்களை ரசிப்பாய். பெண்கள் இவ்வாறு செய்தால் என்னவாகயிருக்கும் உன் மனநிலை உனக்குத் தெரியாது.


உன்னோடு பயிலும் ஏதேனும் ஒரு மாணவியை "இதெல்லாம் படிக்கலனு யார் அழுதா." என்று நினைக்க வாய்ப்புண்டு.


பதின் வயதுக் கோளாறில், மனதில் குற்றவுணர்ச்சியோடோ இல்லாமலோ நீ சில விஷயங்கள் செய்யக்கூடும். ஆனால் அவற்றை ஒரு பெண் செய்வதைக் கண்டால், ஆங்கில வசைச் சொல் கூறிக் கடந்து போவாய். ஆணோ பெண்ணோ, தவறு தானே என்ற எண்ணம் வராதுனக்கு.


அலுவலகத்தில் பெண் தோழிகள் இருப்பார்கள் உனக்கு. ஆணுக்குப் பெண் நிகர் என வாதிடுவாய் உனது தேநீர் விவாதங்களில். மேற்கத்திய நாகரிக பெண்களை நோட்டம் விடுவாய். ஆனால் நீ உன் வாழ்க்கைத் துணையைத் தேடும் போது, அடக்கமான பெண் தேடுவாய். தமிழ் கலாச்சாரத்தின் மீது புதிதாக பற்று வரும் அப்போது.


திருமண நாளில் பெருமையாகக் கூறுவாய். "இனிமேல் இவள் எங்கள் வீட்டுப் பெண். கவலை கொள்ளலாகாது" என.ஒரே நாளில் வேறு குடும்ப உறுப்பினராக மாற்றப்படும் வலி அறிவாயா? உன்னால், "இன்னிலிருந்து இது என் குடும்பமல்ல. நான் அவளின் குடும்ப உறுப்பினர்" என்று மனதளவிலாவது நினைக்க முடியுமா? குடும்ப உறுப்பினர் அடையாள அட்டையிலிருந்து பெயர் பறிக்கபடும்போது வரும் வேதனைதான் உனக்குப் புரியுமா?


இருபது வருடங்களுக்கும் மேலாக பழகிய பழக்கவழக்கங்கள் அனைத்தும் துறந்து, நம் குடும்ப பழக்கங்களுக்கு மாறுவாள்.


பிறகு என்ன, என்னைப் போன்றே ஒரு பெண், உன் அவா அனைத்தும் அறிந்து உன்னைக் கண் போன்று பார்த்துக் கொள்ளும் ஒரு படித்த பெண் இருப்பாள். விடியலில் எழுந்து உனக்கு அவசரமாக உணவு சமைப்பாள். இல்லாவிடில் நீ கோபித்துக் கொள்ள மாட்டாய் என அவளுக்குத் தெரியும். ஆனாலும், தாமதமானால் பரபரப்பாவாள். சுவை இல்லையெனில் கை உதறும். நீ மற்ற ஆண் போல் வசை பாட மாட்டாய் என பெருமிதம் கொள்வாள். ஏனென்றால், அது அவள் வேலையல்லவா? ஆண் உணவு உண்ணலாம் ஆனால் சமைக்கலாமோ?


உன் பள்ளிக்காலத்தில் எவ்வாறு எழுந்து, குளித்து, உணவுண்டு, மதிய உணவு எடுத்துக் கொண்டு போனாயோ, அதே போல் இருப்பாய். அவளும் அவ்வாறு வளர்ந்தவள் என உனக்கு விளங்காது. அவளுக்கும் தான். ஏனெனில் முடிவில் அவள் கணவனை கவனிக்கும் இயந்திரம் என்று தானே அவளுக்கு போதிக்கப்பட்டிருக்கும்?!


காலச்சக்கரத்தில், உன்னை, குழந்தைகளைக் கவனித்தல், அரக்கப் பரக்க வேலைக்கு(எந்த வேலையின் நேரம் மேற்சொன்ன தலையாய கடமைகளுக்குத் துணை நிற்குமோ, அந்த வேலை. அவள் மனம் மகிழ செய்யும் வேலையல்ல) செல்லல், இல்லாவிடில், பகலெல்லாம் உலகின் அனைத்து இல்லத்தரசிகளின்(!!!) அன்றாட வேலை செய்தல் என நாட்கள் போகும்.


இப்போது மறுபடியும் நான் மேற்கோளாக்கிய கடித வரிகளைப் பார். உப்பு நீரால் நிறம் மங்கிய மற்றொரு படகு உருவாகியிருக்கும்.அப்படகு தன் உண்மை நிலை, குணத்தை மறந்து, தரைதட்டியிருப்பதே நம் இயல்பு என நினைத்திருக்கும். உடைத்தெறிந்து, தரைதட்ட மறுத்து காற்றைக் கிழித்து கடலில் செல்லும் மரக்கலங்களைக் கண்டால் அவை இயல்பு நிலை மாறி விரோதம் விளைவிக்கிறது என பொருமும்.

புரிகிறதா? எவ்வாறு காலங்காலமாக பெண் மாற்றப்படுகிறாள் என்று.


ஆனால் மகனே, நீ இவ்வாறு இருப்பாய் என்ற என் கற்பனையின் வடிவம் நான் கொடுத்துள்ளேனே. இக்காலத்தில், மிகச் சிறந்த ஆண்மகனின் அடையாளம் இவை. என்னே முரண்பாடு! இதை விட மிக மிக மோசமான ஆண் மக்களிடம் சிக்கிய பெண்ணின் நிலையை சற்று யோசித்துப் பார். இன்றைய தலைப்புச்செய்திகள் பதிலை விளக்கும்.


பெண்களை அன்பான ஏவலாளாக, காமப் பொருளாக நினைத்து அவர்களும் அவ்வாறே மாறி, மற்ற பெண்களும் அவ்வாறே இருக்க வேண்டுமென நினைத்து, இப்போது பெண்களே பெண்களுக்கு எதிரியாகும் நிலை உள்ளது.


தரை தட்டிப் போன படகாக நான் இருக்க விரும்பவில்லை அருண்மொழி. இக்கால நல்லவனாக உன்னை வளர்த்து, காலங்காலமாக செய்யும் தவறை நான் புரிய விழையவில்லை.


எந்த நீண்ட நெடுங்கால பிரச்சனையும் ஒரே நாளில் சரி செய்துவிட முடியாது. ஆனால் மாறுவதற்கான வித்து நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. மாற்றம் நம்மிலிருந்து ஆரம்பிக்கட்டும்.


ஆண் பெண் இருவரும் உடலளவில் மட்டுமே வேறு வேறு. ஆண்கள் செய்யும் அனைத்தும் பெண்களால் செய்ய முடியாது அதே சமயம் பெண்களின் காரியமனைத்தும் ஆண்களால் புரிய இயலாது. இச்சிலவற்றைத் தவிர, மனதளவில் இருவருமே ஒன்று. இதனை நீ நன்கு புரிந்து கொண்டாலே மாற்றம் துவங்கிவிடும்.


என்னைப் பொறுத்தமட்டில், நீயும் உன் தமக்கையும் எனக்கு ஒன்றே. இருவருக்கும் அனைத்து சலுகைகளும் உண்டு, அனைத்துக் கட்டுப்பாடுகளும் உண்டு.


உணவு நம் உடம்பை வளர்க்க மிக மிக அவசியம். அதனைத் தயாரிப்பதை பெண்களுக்கே விட்டு விடாதே. அருண், நான் உனக்கு அனைத்து வேலைகளையும் கற்றுத் தருவேன். அவை ஓர் ஆண் செய்யக் கூடாதவையோ, மறைந்து செய்பவையோ அல்ல. அன்றாடம் செய்ய வேண்டிய கடமை.


பெண்களை அவமதிக்கும் கூட்டத்தைத் தட்டிக் கேட்கும் ஓர் ஆளாக உன்னை வளர்ப்பேன் அருண். பெண் அடிமை என நினைக்கும் அனைவருக்கும் பாடம் புகட்ட வேண்டிய பொறுப்பு உனக்களிக்கிறேன்.


உனக்குத் திருமணம் நடக்கும். அழகு, உடை பார்த்துத் தேர்ந்தெடுக்காதே. உனக்கு நல்ல தோழியாக அதே போல் நீ அவளுக்கு நல்ல தோழனாக இருக்கமுடியுமெனில் மணம் புரி.


நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு வீட்டை, ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும். நானும் உன் அப்பாவும் சேர்த்த சொத்திலோ அல்லது உன் மாமனார் மாமியாரின் பங்களிப்பிலோ அல்ல.


அவளுக்கு ஆணித்தரமாக புரிய வை. திருமணம் என்பது உயிருள்ள ஒரு பெண்ணை அவள் குடும்பத்திலிருந்து பிரித்து இங்கு கூட்டி வருவது அல்ல என்று, கன்னிகாதானத்திற்கு நீ துணைபோக மாட்டாய் என்று. அனைவரும் ஒரே குடும்பம் என்பதை உன் செயல்களால் புரிய வை.


அவளின் குடும்பத்தாரோடு பழகு. அவர்களே உன் தாய் தந்தையெனப் பழகு. அங்கே செல்லும் போது அவர்களின் இராஜ உபசரிப்பில் திளைக்காமல், அவர்களோடு வேலைகள் செய். மணமகள் வந்ததும் முழு வேலைகளையும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கும் சமூகம், அவளின் வீட்டிற்கு மணமகன் வந்தாலோ, மனம் கோணாமல் உபசரிக்கச் சொல்கிறது. எப்பேற்பட்ட கேவலமான முரண்பாடு இது!!!


நீ அவர்களின் மகன், அவர்களைக் காலம் முழுதும் காப்பாற்றும் கடமையை ஏற்றுக் கொண்டாய் என உணர்த்து.


உன் மனைவியின் விருப்பங்கள் அறி. அவள் திறமையாக ஆர்வமாக இருக்குமிடத்தை அவளுக்கு அளி. காலை அவளுடனே எழுந்திரு. வீட்டின் அனைத்து வேலைகளும் உன்னுடைய வேலைகளும்தான், நீ அவளுக்குச் செய்யும் உதவிகளல்ல அவை.


பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் இவற்றைக் கடைப்பிடி. அவற்றின் உண்மையான காரணங்களுக்காக மட்டும். நம் வீட்டில் செய்வது போன்றுதான் அவளிருக்க வேண்டும் என வற்புறுத்தாதே. அவளின் பழக்க வழக்கங்களை நீ ஏற்றுக்கொண்டால் குறையேதும் நிகழப்போவதில்லை. இதற்குமேலும் பிணக்கு ஏற்படுகிறதா? அச்சம்பிரதாயத்தைத் துற. பழக்க வழக்கங்கள், விழாக்கள் அனைவரும் ஒன்று கூடிக் களிக்க. இவ்வாறு அல்ல அவ்வாறு அல்ல எனப் பேசி பிணக்கு வளர்ப்பதற்கு அல்ல.


நான் உறுதியாகக் கூறுகிறேன், நீ உன் வீட்டுப் பெண்களை நன்முறையில் நடத்தினாலே போதும், அவர்களால் தலைமுறை தலைமுறைகளுக்கு நன்மக்கள் உதிப்பர்.


ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. "மகாராணியால் வளர்க்கப்பட்ட ஒருவன் தான், மனைவியை இளவரசி போல் நடத்த முடியும் !!!".


படகானது தரை தட்டாமல், இலக்கு நோக்கி, கொண்டல் காற்றில் பயணம் செய்யும் ஆழ்கடலும் நீயே!!! உன் அம்மாவிற்கு மகாராணி பட்டமளிக்கும் இளவரசனும் நீயே!!!


இம்மடலில் நான் கூறியது போல் உன்னை வளர்ப்பேனடா. என்றாவதொருநாள் இம்மடல் நீ காணும் வேளை, பெருமையுடன் மார்தட்டு... பெண்ணுக்குச் சம உரிமையென்பது போராடிப் பெற வேண்டியதல்ல, ஆண்களை உதறித் தனியே பெறுவதல்ல, இருவரும் இயந்து வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழல வைப்பதில் தான் ஆண் பெண் சம உரிமை, அதைக் கற்றுக் கொடுத்தவள் உன் தாய் என்று.

என்றும் அன்புடன்,


அம்மா.


No comments:

Post a Comment