சிறிது நாட்களுக்கு முன், எதேச்சையாக ஒரு அம்மாவிற்கும் குழந்தைக்கும் காய்கறிக்கடையில் நடந்த ஒரு உரையாடலை செவிமடுக்க நேர்ந்தது.
அம்மா: “Kutty, what do you want for snacks tomorrow?” Shall I buy carrot?பையன்: (சிறிது நேரம் யோசித்து) “Ma … I want sprouts”
அம்மா:
(கடைக்காரரிடம்) தம்பி!! வெள்ளரிக்காயும் பில்லில் சேத்துக்கோ!!!
இதில் பெரிதாக என்ன இருக்கிறது என்று நினைக்கலாம். நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்தும், குழந்தையிடம் ஆங்கிலம் பேசும் பெற்றோர்கள் இன்று நிறைய.தமிழ் அவர்களின் தாய்மொழியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆங்கிலம் தாய்மொழியாக இருக்க வாய்ப்பில்லை.
20 வருடங்களுக்கு முன்பு, ஆங்கிலம் கோலோச்ச, நம் மக்கள் திணறினர். ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளுக்குக் கிராக்கி அதிகம். பள்ளிகளில், ஆங்கிலம் விடுத்துப் பேசினால் அபராதம். இப்படி இருந்த காலத்தில் நான் படித்தேன்.
இன்று, இதே நிலை தமிழுக்கு. வெட்கக்கேடு. ஆங்கிலம் தவறென்றுக் கூறவில்லை. தாய்மொழியை மறந்த மொழி வாழ்க்கையை மேம்படுத்தாது என்கிறேன்.
ஒரு மொழி என்ன, நம் குழந்தைகள் பல மொழிகள் கற்கட்டும். ஆனால் தாய்மொழி இன்றியமையாததாக இருத்தல் அவசியம்.
நமது தலைமுறையிலேயே தமிழ் வாசிக்க, எழுத, தரிகினத்தோம் போடும் பலரை இன்று பார்க்கிறோம்.வருங்கால மக்களுக்குத் தமிழ் அவசியம் என்று சொல்லும் நம் நிலைமை என்னவாக இருக்கிறது என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
"தமிழ் அவ்வளவா வாசிக்க வராது" அன்று பெருமையுடன் வெட்கப்படும் நாகரிக மக்கள்.
கதைப்புத்தகம் கூட ஆங்கிலத்தில் மட்டுமே வாசிக்கும் ஒரு தரப்பு.
ஆனால் இன்றும், எல்லாத் தரப்பினரிடேயும், தமிழ் ஆர்வலர்கள் உள்ளனர். தமிழ் மெல்லச் சாவதைக் கண்டு நாம் என்ன செய்கிறோம்?
குழந்தைக்குத் தூய தமிழில் பெயரிடுகிறோம்.
"பொன்னியின் செல்வன்" படித்து முடித்து திருப்தியடைகிறோம்.
முகநூலில், தமிழ் சம்பந்தமான பதிவுகளைப் பகிர்கிறோம். வேறு?
மாமரம் "மாங்காய் மரம்" ஆகிவிட்டது.தமிழ் வேட்டி விளம்பரத்தில் மட்டுமெ பெருமையாகிறது.ல, ள, ழ வேறுபாடு வெறுப்பாகிறது.
இப்படியே போனால், 10 வருடங்களில், தமிழின் உண்மை அருமை யாருக்கும் தெரியப் போவதில்லை. தமிழ் - எங்கள் தாய்மொழி என்றளவில் மட்டுமே போகும்.
புதிது புதிதாக வருபவற்றிற்கு இயைந்து கொடுங்கள். பின் தங்கி "பழைய பஞ்சாங்கம்" என்று பெயரெடுக்கத் தேவையில்லை. ஆனால், தொன்மையை பிள்ளைகளிடம் கொண்டு செல்லுங்கள்.வீட்டில் தமிழில் பேசுங்கள். தமிழ் பேசப் பழக்குங்கள்.
தமிழ் நூல்கள் அதிகம் இருக்கட்டும். ஆங்கில பாணியில் வரும் தமிழ் நூல்கள் வேண்டாம். திருக்குறளை அறிமுகப்படுத்துங்கள். ஆண்டாள் துயிலெழச் செய்யட்டும். நாவுக்கரசர் பாடலுடன் நாள் நிறைவுறட்டும்.
நாமும் இழந்த அனைத்தையும் குழந்தைகளுடன் கற்போம்.இக்காலத்தில் பள்ளிகள் ஆங்கிலத்தைத் திணிக்கும் வேலையைச் செய்து விடுகிறார்கள். நாம் தமிழில் மூச்சுவிடக் கற்றுத் தருவோம். தமிழ் நமது இயல்பு என்பதைப் புரியவைப்போம்.
தமிழின் அர்த்தச்செறிவு புரியப் புரிய, மற்றவை கற்றல் அதிகமாகும். மோகம் குறையும்.தமிழ் என்று சொல்லி அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் பின் போகாதீர்கள். அர்த்தமுள்ளதை உணர்ந்து உணர்த்துங்கள்.
நாளையத் தலைமுறையாவது நாம் இழந்ததை வாழட்டும்.
No comments:
Post a Comment