Friday, September 12, 2014

காவல் கோட்டம்


ஒரு நூலுக்கு விமர்சனம் அல்லது ஒரு திரைப்படத்திற்கு விமர்சனம் என்பது இக்காலத்தில் மிக பிரபலமாக மாறிவிட்டது. வலைப்பதிவு பலபேர் கண்களில் விழ வேண்டுமா? எதனையாவது விமர்சிக்கவும் என்பது பதிலாக உள்ளது. விமர்சனம் என்பது ஒருவருடைய தனிப்பட்டக் கருத்து மட்டுமேயென்பேன் நான். ஒரு நூலையோ அல்லது திரைப்படத்தையோ விமர்சிப்பதில் எத்தவறும் இல்லை. ஒத்தக்கருத்துடையவர்கள் வாசித்துப் பலன் பெறலாம். ஆனால் விமர்சனம் என்னும் பெயரில் குறைகளை மட்டுமே தேடித் தேடி வசை பொழிதல் அவசியம் அல்ல‌, அநாகரிகம். குறைகள் இல்லாத மனிதன் இல்லை. மனிதனின் தேடல், அறிவு, ஆராய்ச்சி இதன்மூலம் வெளிப்படும் எந்தவொரு படைப்புமே உன்னதம் தான். எல்லா படைப்புகளையும் ருசிப்போம். நிறைகளைப் பாராட்டுவோம். குறையென நம் மனதிற்குத் தோன்றியதை சுட்டிக்காட்டலாம். அடுத்தவருக்கு அதே குறை நிறையாகத் தோன்றலாம். படைப்பாளியின் மனத்திற்கு இக்குறை குறையாகத் தோன்றினால், அடுத்த படைப்புகளில் மாற்றம் காண்போம். அதைவிடுத்து, அவரை புறக்கணிப்பது அவசியமல்ல என்பது என் கருத்து. மேலும், ஒரு படைப்பாளி, ஒரு விமர்சனத்தை வாசிக்கும் பொழுது, விமர்சகரின் தனிப்பட்டக் கருத்தை மனதார ஏற்றால், உணர்ந்தால், மாற்றம் தன்னால் வரும் அவரது அடுத்த படைப்பில். பல விமர்சனங்கள் சுட்டிக் காட்டியதால், அவரால் ஏற்றுக் கொள்ள முடியாவிடினும், மாறுதல் கொண்டுவருதல் போலித்தனம். வியாபாரமாகிவிடுகிறது கலை இங்கே !!! நான் விமர்சனங்கள் எழுதிப் பழக்கப்பட்டவள் அல்ல. ஆனால் விமர்சனங்கள் படிப்பதுண்டு. அதைப்பற்றியே பேசி, விவாதம் புரிந்து, நேரம் செலவிடுதல் எனக்குப் பிடிக்காத ஒன்று.
நிற்க!!!
kaval kottam book
காவல் கோட்டம்
காவல் கோட்டம். 2011ல் சாகித்திய அகாதமி விருது வாங்கிய நூல். இப்படைப்பை வாசிக்க வாய்ப்பு இப்பொழுது தான் அமைந்தது. இதனைப்பற்றி ஒரு வலைப்பதிவு எழுதலாம் எனத் தோன்றியபோது, விமர்சனம் பற்றிய எனதுக் கருத்தையும் இணைத்துக்கொண்டேன். இப்போது, வலைப்பதிவைத் துவங்கலாம். ஒரு படைப்பை வாசிக்க, எந்தவொரு முன் அனுமானங்களுடன் துவங்க வேண்டியது அவசியமில்லை. மற்றவர் கருத்துகளைப் படிப்பதற்கு முன்பே, படைப்பைப் படித்து விட வேண்டும். அப்போது தான், நமக்கு அதன்மீது என்ன கருத்து என்பது தெளிவுற விளங்கும்.

காவல் கோட்டம் மதுரையைப் பிண்ணனியாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நூல். எதற்காகக் காவல் கோட்டம் என்று பெயர் என்பது ஆரம்பத்தில் எனக்குப் புரியவில்லை. ஒட்டுமொத்த வரலாற்றைச் சொல்லும் மிகப்பெரும் புத்தகம் என்றுதான் நினைத்தேன்.

மாலிக் கபூர் படையெடுப்பில் ஆரம்பிக்கின்றது புத்தகத்திலுள்ள வரலாறு. ஆறு நூற்றாண்டுகால வரலாறு என்பதால், முக்கிய நிகழ்வுகள் வரலாற்றுப்பதிவாக பிண்ணனியில் நிற்கின்றது. சிறிது சிறிதாகப் புரிகிறது.. ஆறு நூற்றாண்டுகால கள்ளர் நாயக்கர் வரலாற்றைக் கூறு போட்டு விளக்க முற்படுகிறார் ஆசிரியரென்பது.

இப்புத்தகத்தைப் பருக ஆரம்பித்தால், இடைவிடாது வாசித்து முடித்துவிட வேண்டுமென்பேன் நான். முதலில் 50 பக்கங்கள் தாண்டுவதற்குள் பல வருடங்கள் கடந்துவிட்டதோ எனத் தோன்றியது. கதையும் கற்பனையும் சேர்ந்த வரலாற்றைப் படித்துப் படித்துப் பழக்கப்பட்டுவிட்டது நமக்கு. வரலாறு கசப்பு என்ற எண்ணம் ஆழ்மனத்தில் அனைவருக்கும் உள்ளதால் தானே இனிப்புடன் அளித்தால் ஆசையாக அள்ளுகிறோம்? காவல் கோட்டம் வரலாற்றை வரலாறாகவேச் சொல்கிறது. வேலைப்பளு காரணத்தால், இடையில் வாசிப்பதை நிறுத்திவிட்டேன். பின்பு ஒரு மாதம் கழித்து மறுபடியும் துவங்கினேன்.
ஆறு நூற்றாண்டுகால மதுரையில், பல்வேறு சரித்திர நிகழ்வுகளுக்கு இடையே கள்ளர் பரம்பரை ஆரம்பிக்கின்றது. கொல்லவாரு சமூகம் சொல்லும் வரலாறு மறுபுறம். சடச்சி, கங்காதேவி என்ற இரு பெண்களின் வாயிலாக, இருவேறு சமூகவரலாறு மதுரையில் கால் வைக்கின்றது. பெண்களின் வீரம், ஆளுமைத்திறன் இவற்றைக் கொண்டே இருபெரும் இனக்குழுக்கள் விதையைத் துளைத்து எழுந்துள்ளன.

ஒருபுறம் சடச்சி. "காப்பாத்து.. இல்லேன்னா சாகு" என்று கணவனை எழுப்பும் மறக்கர்ப்பிணியாக அறிமுகமாகிறாள். தனியாளாக பிள்ளைபெற்று, காய்ந்த மொச்சைச்செடியை மெத்தையாக மாற்றி குழந்தை வளர்த்து அவள் மூலம் கள்ளர் சமூகம் உயிர்பெற, மகன் வழித் தோன்றல்களினால் குலக்கதை வாரிசுகளைச் சென்று சேர்வதில்லை. பின்பு மருமகள்கள் மூலமாக குலம் மூலக்கதை அறிந்து வளர்கிறது.மறுபுறம், கங்கா தேவி மதுரை வருகிறாள். விஜயநகர பேரரசு சுல்தானை சாய்க்க நினைக்க, களப்பலியாகிறாள் கனகநுகா. குமாரகம்பணை இயக்குகிறாள். 'மதுரா விஜயம்' ஈன்றெடுக்கிறாள்.
அப்படியே நாயக்கர் கால படையெடுப்புகள், மன்னர்கள் என விரிவடைகின்றது புத்தகம். சாளுவக்கட்டாரி கள்ளர்களுக்கு அளிக்கப்பட்டு, காவல் உரிமை கிடைக்கிறது. இவை முதல் 300 பக்கங்களுக்குள் முடிந்துவிடுகின்றது. பின்பு, ஆங்கிலேயர் வருகை. களவும் காவலும் தொழிலாகக் கொண்ட தாதனூர் கள்ளர்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை சடச்சிப் பொட்டலிலிருந்து விரிகின்றது.

அக்கால மன்னர்களைவிட அடக்குமுறைக்கு தமிழ்நாட்டை ஆளாக்கியது நாயக்கர் கால படையெடுப்புத்தானோ எனத் தோன்றுகிறது. வாழ்க்கையின் அனைத்து அடுக்குகளிலும் தெலுங்கு மக்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றனர். ஆனாலும், பல்வேறு வளர்ச்சிப்பணிகள். தரிசாகக்கிடந்த கம்பம் பகுதியில், கன்னட ஒக்கலிகர்களை அமர்த்தி, விவசாயம் துவங்குகின்றனர் நாயக்கர். மதுரைக்கு மீனாட்சி மறுபடியும் வருகை அளித்து, கிளிகளினூடே கோவிலுள் செல்கிறாள். இப்படிப் பற்பல. மக்கள் பண்பாட்டு முறைகளை மாற்றிக் கொள்கின்றனர். ஆனால், காவல் கோட்டத்தில், நாயக்கர்களின் ஆதிக்கத்தை விட, உபயோகமான பணிகள் பேசப்படுகின்றன. நாயக்க மன்னர்கள் கதாநாயகர்கள் ஆகின்றனர்.

கள்ளர்கள் களவு மற்றும் காவல். பல்வேறு காவல் வகைகள். காவல் கூலி வாங்கப்படுகிறது. கூலி தராதவர் இடங்களில், காவல் புரியும் இனமே களவும் புரிகின்றது. மக்கள் தாதனூர் கள்ளர்களின் வீரத்தில், கன்னம் போடும் திறமையில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். காவல் கூலிக்கு எதிராக யாரும் நிற்பதில்லை.

வரலாறு என்பதை வரலாறாகவே அளித்துள்ளார் ஆசிரியர். இது சரியா? ஏன் இப்படி நடந்துள்ளது என்று பல கேள்விகள் எழுகின்றன. ஆனால் காவல் கோட்டம் இவற்றிற்குப் பதில் சொல்லும் நூலல்ல. இப்படி ஒரு வாழ்க்கைமுறை இருந்துள்ளது என்பதை உயிர்துடிப்புடன் கூறுகிறது.
ஆங்கிலேயரின் வருகைக்குப்பிறகு கதையின் போக்கு வேகம் அடைகிறது. கள்ளர்களின் காவல் மற்றும் களவை ஒடுக்க நினைக்கும் காலனி ஆதிக்கத்தின் திட்டமும், தாதனூர்க்காரர்களின் பதிலடியும் வரிசையாக வருகின்றன. காவலும் புரிந்து, களவும் செய்தாலும், அம்மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை படிப்பவர்களுக்கு கள்ளர்களின் மேல் ஒரு பாசம் வரவழைக்கின்றது. தங்கள் இனம் செய்யும் தொழிலால் சமூகத்திற்கு என்ன பலனென்றெல்லாம் நினைக்காத மக்கள், உள்ளுக்குள் எவ்வளவு ஈரம் பொருந்தியவர்களாக இருக்கின்றனர் என்பதை உணர்கிறோம். சின்னானை பலி கொடுக்க சம்மதித்துவிட்டு துக்கத்தில் ஊரே கிடக்கும்போது, தண்டட்டி வளர்க்க வந்தவன்மீது பாசம் பொழிந்து, பின்பு அவன் தாதனூரிலியே களவாட, உறையும் மக்கள், களவு புரியச்செல்லும் இடத்தில் தற்கொலையைப் பார்த்து விட்டுத் வெறுங்கையோடு திரும்புதல் என நீள்கிறது பட்டியல்.
அடக்க அடக்க சிலிர்த்து எழும் வெள்ளந்தி மக்கள். முழு ஊரும் அழிந்து வேறு தொழிலும் அறியாதவர்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். பெரியாறு அணையின் பக்கம் வாழ்வாதாரமான காடுகளை அழிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களை இவர்கள் போக்கிலேயே விட்டு அல்லது, முழுமையான காவல் பொறுப்பை அளித்து, களவை ஒழிக்க ஏன் யாருமே வகை செய்யவில்லை என வினா எழுகின்றது. ஆங்கிலேயர் கச்சேரி ஆரம்பிக்கின்றனர்(கச்சேரி - இன்றைய காவல் நிலையம்). பல நலத்திட்டங்கள். ஆனால் எதுவும் மக்கள் நலனுக்காக அல்ல. அடக்குமுறைக்காக. தாது வருடப் பஞ்சம் வருகின்றது. மக்கள் கொத்துக் கொத்தாக மடிகின்றனர். கிறுத்துவப் பள்ளிகள் அனாதை குழந்தைகளை எடுத்து மதமாற்றம் செய்கின்றனர். தாதனூர் பையன் டேவிட் ஆக மாறி, பின்பு இறக்கும் தருவாயில் வருந்தி அவர் எழுதிய நாட்குறிப்புகள், தேக்கடியில் தேவாலயம் கட்ட வரும் பாதிரியார் என இவர்களின் பங்களிப்பு மிக்க நன்று. அனைத்து மதமும் நல்வழிதான். மனிதர்கள்தான் மதம் பிடித்து அலைகின்றனர் என்பதை இவர்கள் மூலம் கூறியுள்ளார் ஆசிரியர்.

மேலும் பல்வெறு குறிப்புகள் உள்ளன. மதுரைக் கோட்டை இடிபடும்போது சாமிகள் இறங்கி வருவது மிக நுட்பமாக உள்ளது. ஒரு பாரம்பரியத் தொடர்ச்சி எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கின்றது, அது ஒரே நாளின் வீழும்போது மக்கள் மனநிலை எனக் கச்சிதம்.

பாரம்பரியத் தொடர்ச்சி அழியும்போது, ஒரு இனமே அழிகின்றது, ஒரு ஊரே அழிகின்றது. பண்பாடு சிதைகின்றது. முற்போக்குச்சிந்தனை அவசியம். ஆனால், பாரம்பரியத்தை அழிக்காமல், அதனூடே மக்களைப் புரிந்துகொள்ளச் செய்யும் வழி இல்லாமல், களவு முழுமையாக அழிக்கப்படத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகின்றது. களவின் நுட்பங்களறியாமல் காவல் காக்கும் கச்சேரிப் போலீசார் திணறுகின்றனர். மண் பெற்றெடுத்த மக்களுக்கு உரிமை மறுக்கப்படுகின்றது.

Author
ஆசிரியர் சு.வெங்கடேசன்
ஆசிரியர் சு.வெங்கடேசன். 10 ஆண்டுகால முயற்சியினால் சாத்தியமாக்கியிருக்கிறார் இப்படைப்பை. "கதை அறுந்துபோனால் ஊர் அறுந்துபோகும். ஊரும் கதையும் வேறல்ல, கதையும் உயிரும் வேறல்ல" என்கிறார். "தாயைப் புதைத்த மகனும் மகனைப் புதைத்த தந்தையும் எல்லோரையும் புதைத்த மருமகளும் நின்று வடிக்க சொட்டுக் கண்ணீரும் நேரமும் இன்றிக் கூட்டத்தைத் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தனர்" என்று தாது வருடப் பஞ்சத்தை எழுதிய பக்கங்களில் வலி தெரிகின்றது. கள்ளர் நாயக்கர் மக்களின் கதையினூடே பலப்பல செய்திகள், ஒரு தாசி ஊருக்கே உணவளித்து உயிர்விடுகிறாள். தாழ்த்தப்பட்டவர்கள் படிக்கும் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க மறுக்கும் மக்கள். பெண்களின் ஆளுமை இருக்கவே, பெண்களின் அனுமதி இல்லாமல் வயதானவருடன் திருமணம். உடன்கட்டை ஏற விழையும் பெண், உடன்கட்டை ஏற மறுக்கும் மங்கம்மா. ஊர் பெரியாம்பளையின் தலைமையில் ஒற்றுமையாக மக்கள். கச்சேரி கட்ட வரும் வெள்ளையர்களிடம் காணிக்கை கட்டிவிட்டு வேலை ஆரம்பிக்கச் சொல்லும் வெள்ளந்திக் கூட்டம். மண்ணின் கதை இது. மண் தான் கதை சொல்கிறது. இரண்டு சமூகத்தின் வரலாற்றுக்குள் இவ்வளவு இருக்குமென்றால், எத்தனைப் பழம்பெரும் சமூகம் உள்ளது? தமிழன் ஆக்கிரமிப்புகளிலும், அடக்குமுறையிலும் வாழ்ந்து பழக்கப்பட்டவனாக ஆக, பாரம்பரியத்தை இழந்திருக்கின்றான். இப்போது பாரம்பரியத்திற்கான விளக்கமாக நாம் புரிந்து கொள்வது, உண்மையா இல்லைத் துப்பாக்கி முனையில் திணிக்கப்பட்டதா என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

காவல் கோட்டம் - பிழைகள் இருக்கலாம். ஆனால் அதை மீறிய ஒரு வசீகரத்துவம் உள்ளது. இலக்கிய விவாதங்களுக்குள் செலுத்தாமல், சாமானியன் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு புத்தகம்.

No comments:

Post a Comment