இறைவி
சமீபத்தில்
வந்த படங்களுள் வித்தியாசமான திரைப்படம். தலைப்பும் கூட. கார்த்திக் சுப்புராஜின்
படைப்பு. முதலில் பாலச்சந்தர், பாலு
மகேந்திரா, சுஜாதா - இவர்களுக்கு நன்றி
தெரிவிக்கிறார்கள்.
கதைக்களம்
பொன்னி(அஞ்சலி) தன் தோழிகளிடம்
வாழ்கை லட்சியம் பற்றிக் கூற
("நமக்கு என்ன லட்சியம். வீட்டுல
பாக்குற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிட்டு செட்டில்
ஆக வேண்டியதுதான்"), மழையில் சைக்கிள்கள்
ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து விழுகின்றன.
இந்த முதல் காட்சியிலேயே இயக்குனர்
மேடை போட்டு அமர்ந்து விடுகிறார்.
மலர்விழி("மயக்கம் என்ன" பூஜா)
கணவனை இழந்து, பின் காதல்
மீது நம்பிக்கையற்று, தேவைக்காக மைக்கேலுடன் பழக, மைக்கேல்(விஜய்
சேதுபதி) மலரைத் திருமணம் செய்ய
விழைகிறான். மலர் திருமணத்தில் நம்பிக்கையில்லையெனக்
கூற, பொன்னி-மைக்கேல் திருமணம்!!!
மறுபக்கம்,
யாழினி(கமலினி) சுதந்திரமாக தன்
திருமணம் குறித்த முடிவு எடுக்கிறாள்(அருள் - எஸ்.ஜே.சூர்யா). தன் திரைப்படம்
வெளியாகாமல், குடிக்கு அடிமையாகி குடும்பம்
கெடுக்கும் அருள்.
இவ்விருவரின்
வாழ்கைப் பாதை - அவர்கள் எடுக்கும்
முடிவு - இதன் மூலம் இயக்குனர்
கூற விழைவது - இதுவே "இறைவி".
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரம்,
சுஜாதாவின் "ஜன்னல் மலர்" குறுநாவலைத்
தழுவியது. அதிலுள்ள ஜெகன் அப்படியே
இங்கு - பாபி சிம்கா.
நடிப்பு
சொல்லத் தேவையில்லை. அனைவருமே நன்று. அதுவும்
இறுதிக் காட்சியில் எஸ்.ஜே.சூர்யா
மிகப் பிரமாதம்.
பெண் விடுதலையாவதும், சோகத்தில் உழன்று கிடப்பதும் அவள் கைகளில் மட்டுமே உள்ளது. ஒரு பெண், தனக்கான விடுதலையைத்
தானே எடுத்தாலொழிய, அவளுக்கு அது கிடைக்காது
என்ற உண்மையை அழுத்தந்திருத்தமாக பதிவிட்டுள்ளனர்.
குறிப்பிடும்
படி, பல காட்சிகள்
- படம் முழுதும் மழை!! மழையைப் பின்புலமாகக் கொண்டே அனைத்து உணர்ச்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன.
- முன் சொன்ன சைக்கிள் காட்சி.
- ஆண்கள் விடுதிக்குப் பெயர் "அம்பாள் மேன்சன்".
- மைக்கேல் நகை வாங்கித் தர, "என்னால் இதை சுயமாக வாங்க முடியும்" என ஒதுக்கும் மலரின் கதாப்பாத்திரம்.
- முதல் காட்சியில் காற்று, சைக்கிள்களைச் சரிக்கிறது. அதே பொன்னி, கணவனை விடுத்து, தனியே வாழ்ந்து காண்பிக்கும் இடத்தில் காற்றாலைகள்!!
- கூட்டுப் பறவையாக இருக்கும் பொன்னி, தான் யாருக்கும் அடிமையில்லை என உணர்ந்து, வெளிவரும்போது பெய்யும் மழை, அதே மழையில் பயந்து, சுதந்திர முடிவு பொய்க்க, கூட்டிற்குள் அடையும் யாழினி!!! மழையின் பல பரிமாணங்கள் கவித்துவமாய்.
- இருவரின் குணங்கள் மாறும் தருவாயில் ஒரு காட்சி. "மழையில் நனையலாமா?" எனக் கேட்டவுடன் "இல்லை. முழுவதும் நனைந்து விடுவோம்" என பதிலுரைக்கும் யாழினி. அருகில் இரு தேனீர் கோப்பைகள் - ஒன்று மழை நோக்கி. மற்றொன்று நிலம் நோக்கி.
- ஜெகன் தன் அம்மாவிடம் தன்னை நியாயப்படுத்திப் பேசும் ஒவ்வொரு வரியும் நம்மை நிறைய யோசிக்க வைக்கும்.
மற்றபடி,
படத்தின் நீளம் சற்று அதிகம்.
அதே போல் இடைவேளைக்குப் பின்
மெதுவாக ஊர்கிறது.
"துஷ்டா"
பாடல், "ஆயிரத்தில் ஒருவன் - உள்ளே தேடத்
தேட" பாடலின் காட்சியை நினைவூட்டுகிறது.
சுஜாதா,
பாலச்சந்தர், செல்வராகவன் - என பல சாயல்
இருந்தாலும், கார்த்திக்கின் முகம் தெரிகிறது.
குடும்பத்துடன்
கண்டுகளிக்கும் வகை படமல்ல இது.
ஒரு சாராருக்கு மட்டுமே பிடிக்கலாம். ஆனால், நிறைய யோசிக்க வைக்கும்
இத்திரைப்படம் காலம் கடந்து பேசப்படும்
கண்டிப்பாக.