"நீ கல்லாகக் கடவாய்"
அகலிகை விக்கித்து நின்றாள். கெளதமர் கண்ணில் தீப்பொறி. இந்திரனின் தவறால் சாபம் பெற்றவள் கல்லாகக் கடவதா? பெண் என்பவளுக்கு எக்காலத்திலும் தீர்ப்பு வழங்கிவிட்டு, அதன் பின் தானே வழக்காடு நடத்தப்படுகிறது!!!
"ஐயனே .....!!!" பாதம் பற்றுகிறாள் அகலிகை. தீ விழி மான் விழியை உற்று நோக்குகிறது. மன்னிப்பு மனித பண்பாடு என்பதை மறந்த நெஞ்சம் சாப விமோசனம் அளிக்கிறது. "தசரத மைந்தன் வருவான். அவன் காலடித் தூசி பட நீ விமோசனம் அடைவாய்"
அகலிகை, கூப்பிய கரங்களுடன் கல்லானாள்....
நாட்கள் செல்ல, அந்நாளும் வருகிறது. ராமனின் கால் தூசி அகலிகை மீது படர்கிறது. உருவம் பெற்ற அகலிகை கண்டு, அவள் வரலாறு கேட்டறிகிறார் விசுவாமித்திரரிடம்.
தவறு புரிந்து பின் திருந்துபவரையே மன்னித்தல் அவசியமாகிறது. நெஞ்சில் பிழை இல்லா இல்லாளை கல்லாக்கியது எவ்வகையிலும் சரியில்லை என்ற ராமன் கெளதமரிடம் சேர்ப்பிக்கிறான் அகலிகையை.
அகலிகை வரலாறு கேட்டவுடன் என்ன தோன்றும்?
"என்ன இருந்தாலும் ஆணுக்குப் பெண் நிகராக முடியுமா? இந்திரனுக்கும் கணவனுக்கும் வேறுபாடு அறியா அகலிகைக்கு சாபம் என்பது, பெண் குலத்திற்கு ஒரு பாடம்..."
"இது என்ன நியாயம்? மனதால் தவறிழைக்காதவளைத் தண்டித்தல் தகுமா? இதே தவறைக் கெளதமன் இழைத்திருந்தால்?? அகலிகை சபித்திருப்பாளா?"
"ராமனுக்குத் தான் என்ன குணம்? அகலிகை மீது பரிவு கொண்ட ராமன் சீதைக்கு அக்னிப்பிரவேசம் அளித்து விட்டானே!!!"
இப்படிப் பல எண்ணங்கள். பல விவாதங்கள். பட்டிமன்றங்கள். "ராமன் செய்தது சரியா பிழையா"
உண்மையில் இதற்காகவா கம்பன் காப்பியத்தைப் படைத்தார்? இதற்காகவா ராமாயணம் உலகம் போற்றப்படுகிறது? ராமன் செய்த்து பிழை என்று வாதிடுவதால், காப்பியத்தை மாற்ற இயலுமோ?
காப்பிய நூல்களின் அர்த்தச் செறிவு அளப்பரியது.மன்னனின் வாழ்கையோ, போரின் விதமோ எதுவாயினும் பல தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் இதனை வரலாறாகவே அளிக்கலாமே. காப்பியமாக ஏன் போற்றுகிறோம். தரும நெறி தவறாமல் ராமன் வாழ்ந்ததாலா? இல்லை, அக்கினிப்பிரவேசம் செய்த சீதையினாலா?
இவ்வனைத்துக் காரணங்களுக்கும் மேலாக உள்ளது நம் வாழ்வு நெறி. இப்புவி வாழ்வின் நோக்கம். ஆன்ம விளக்கம் !!!
"நான்" என்பது யார்? இந்த வினாவிற்கான விடையே புரியாதளவிற்கு கர்மவினைப் பல உள்ள இடத்தில், காப்பியங்கள் ஆன்ம விளக்கம் தர முற்பட்டன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடுபட்டனர்.
இக்கேள்விக்கு விடை தெரிவதற்கான முயற்சியில் நாம் ஈடுபட ஒரு சிறிய தூண்டுதலே அகலிகை வரலாறு.
ஆத்மாவானது கடவுளின் துகள் எனலாம். பேரொளியாகிய கடவுளின் ஒரு மிகச் சிறிய பகுதி. அவ்வாத்மாவே "நான்". அந்த "நான்" சஞ்சரிக்கும் இடமே சரீரம்.
கடவுளின் மிகச்சிறிய பகுதியான ஆத்மா ஒவ்வொரு முறையும் பிறவி எடுக்கிறது, கர்ம வினையைக் களைய. தன் முழு தீய கர்மங்களைப் போக்க பிறவி எடுக்கும் ஆத்மா, அந்தந்தப் பிறவியில் மேலும் தீய/நல்ல கர்மங்களைப் புரிந்து, அதற்கேற்ப மீண்டும் மீண்டும் பிறக்கிறது.
தவறு இழைக்கும் ஒரு ஆத்மா, தான் கடவுளின் ஒரு பகுதி எனத் தெரியாமல், அறியாமையில் தவிக்கிறது.
"நான் யார்?" என்ற வினாவின் விடையறிந்து, அதனையொட்டி வாழுகையில், கடவுளின் தொடர்பு அதிகரிக்கிறது.
இதனை அந்தகர்ணம்/spiritual cord... என்று பல்வேறு பெயர்களிடுகிறோம்.
கடவுளின் அருள் நிறைய நிறைய ஞானம் கிடைக்கிறது.
இந்த உண்மையே அனைத்து காப்பியங்களிலும் கதை வடிவில், வரலாறு வடிவில் வியாபித்துக் கிடக்கிறது. இதன் மூலம் ஆத்மா முன்னேறுவதற்கான வழி செய்யப்பட்டுள்ளது.
அகலிகை குறிப்பது நான்/நாம்/ஆத்மா/The Soul.
அகலிகை("நான்/ஆத்மா") தவறிழைப்பது அறியாமையால். அறியாமை இருளில் தவிக்கும் அகலிகைக்குத் தன் தீய கர்மவினையின் பலன் தண்டனையாக வருகிறது.
கடவுளின் அருள் அவளை எட்டும்போது (ராமனின் வருகை) அவள் தன் உண்மை நிலை அடைகிறாள்(ஞானம் பெறுதல்).
இதே உண்மையை பல நூல்களில் நாம் உணரலாம். இது ஒரு சிறிய பகுதி.
காப்பியங்கள் கூறும் வெளிப்படையான கருத்துக்களோ வாழ்கை நெறிகளோ அனைவருக்கும் உகந்தது. அதனோடு இயைந்தவாறு, காப்பியங்களின் உள்ளர்த்தமும் புரிகையில், ஆனந்தம் அளவிட முடியாததாகிறது.
மேலும் தேடலாம் !!!