Thursday, July 17, 2014

பொன்னியின் செல்வன் – பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கும் முயற்சி !!!

அமரர்கல்கி – நம்மில் பலருக்கு அவர் படைப்புகளை ருசிக்காமல் நாள் நகராது. சிலருக்கு அவரை ஒரு எழுத்தாளராக, பொன்னியின் செல்வன் என்ற சரித்திரப்புதினத்தை எழுதியவர் என்றளவிற்கு மட்டும் தெரியும். சிலருக்கு இனிமேல்தான் நாம் அறிமுகப்படுத்த வேண்டியதுள்ளது. இவர்கள் அனைவரையும் ஒருசேர்க்கும் முயற்சியாகத்தான் பார்க்கிறேன் நான் – SS International Live மற்றும் Magic Lantern குழுவினர் நமக்கு அளித்த “பொன்னியின் செல்வன்” மேடை நாடகம்.

விளம்பரம் பார்த்தபோது எனக்கு அப்படி ஒன்றும் விருப்பமில்லை. ஒரு மிகப்பெரும் சமுத்திரத்தை ஒரு குடுவையில் அடக்க முற்படும் முயற்சியாகப்பட்டது. அதில் வெற்றிபெற்றாலும், முழு சமுத்திரத்தின் சாராம்சம் மட்டுமே அல்லவா அளிக்க முடியும்? மேலும் படிக்கும்போது கிடைக்கும் தித்திப்பில் கொஞ்சம் குறைந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாதே என்று நினைத்து பதிவு செய்ய முற்படவில்லை. ஆனாலும் ஜூன் 8 அன்று நாடகம் ஆரம்பத்தபிறகு, போகலாமோ என்று தோன்றியது. டிக்கெட் கிடைக்கவில்லை. 14ம் தேதி கணவருடன் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குப் புறப்பட்டால், சென்று சேர்ந்த இடம்.. சென்னை மியூசிக் அகாடமி!!! இதைவிட ஒரு அழகான ரசனையான ஸர்ப்ரைஸ் பரிசு வேறு ஏதும் இருக்கமுடியாதெனக்கு.

“ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களைஅழைக்கின்றோம் ….”

இக்காவியவரிகளில் நுழைந்து கால வெள்ளத்திற்குள் சென்றவர்கள், திரும்பி வருவது சாத்தியமில்லாத ஒன்று !!!  இதே வரிகளில் ஆரம்பித்து, நம்மை உள்அழைத்துச் செல்கிறார் திரு.இளங்கோ குமணன் அவர்கள். கலை தோட்டாதரணியாகையால் கோட்டை கொத்தளங்கள் மிகமிக அற்புதம்.

ஆடிப்பெருக்குதினத்தை நல்லாளும், நல்லானும் விவரிக்க, குதிரைமேல் வாராது , குதித்துவருகிறார் நம் வந்தியத்தேவன் (மேடையில் திரு.கிருஷ்ணதயாள்). 4 மணி நேரம் நடந்த நாடகத்தில் கிட்டத்தட்ட அனைத்துக்காட்சிகளிலும் வந்து பாத்திரம் உணர்ந்து இயல்பாகநடித்து அனைவரையும் கவர்கிறார். வந்தியத்தேவனுக்கு முன்னமே தோன்றிவிடுகிறார் நம் நம்பி (Hans Koushik). அடுத்தடுத்து அனைவரும் தோன்றிவிடுகின்றனர். மூன்றரை வருடங்கள் வெளிவந்த நாவலை நான்கு மணி நேரத்திற்குள் அடக்க, பல காட்சிகள் பிணைக்கப்பட்டுள்ளன. பல வசனங்களும் மாற்றப்பட்டுள்ளன. ஆனாலும், கல்கியின் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தும் சமயங்களில், அரங்கமே கைத்தட்டலில் அமிழ்கிறது. கல்கியின் தனித்துவத்திற்குச் சான்று தேவையில்லை. ஆனாலும் இது ஒரு தற்காலம் அளித்த சான்று.
5
இரண்டாம்பாகம் ஆரம்பித்து, அருள்மொழிவர்மர் (SriRam) வந்து வெகுநேரமாகியும், ஆதித்த கரிகாலர் வரவில்லையே என்று எதிர்பாத்திருந்தேன். கடம்பூருக்கு நந்தினியின் அழைப்பை ஏற்று வந்தார் கரிகாலன். மேடையில் நம் பசுபதி. அடடா !! என்ன ஒரு உடல்மொழி !! நிற்பதில் நடப்பதில் வசன உச்சரிப்பில் என அனைத்திலும் தத்ரூபமான நடிப்பு. ஆதித்த கரிகாலன் மரணக்காட்சி .. பழுவேட்டரையர் இழப்பு என வேகமாக நகர்ந்து, பட்டாபிஷேகத்தில் இனிதே நிறைவேறியது நாடகம்.
2
அரங்கத்திலிருந்த நேர்த்திஅருமை. ஆனால் இத்தனை நடிகர்களைவைத்து இயக்கியதிலுள்ள இடைஞ்சல்கள் தெரிந்தன. பொன்னியின் செல்வனாக நடித்தவர் அருமையான தேர்வு. ஆனால் மேலும் நிறைய காட்சிகளும், வசனங்களும் இன்னும் கொஞ்சம் அவரை மெருகேற்றியிருக்கலாம். நாடக முடிவில் வந்தியத்தேவன் போலவோ நம்பி போலவோ கரிகாலன் போலவோ, அருள்மொழிவர்மர் மனத்தில் நிற்கவில்லை. கதைக்கு பெயரளித்த நாயகனல்லவா அவர்!!
4
கட்டை குட்டையான திருமலை சற்று உயரமாக காட்சியளித்தது சிறிய வித்தியாசம். பூங்குழலியாக நடித்தவர் காயத்திரி ரமேஷ். ஒப்பனை அருமை இவருக்கு.

“அலைகடலும் ஒய்ந்திருக்க

அகக்கடல்தான் பொங்குவதேன்?”
இப்பாட்டை நாடகத்தில் சேர்த்துக்கொண்டதற்கு மிக்க நன்றி இயக்குனருக்கு.
3
இளையபிராட்டியாக ப்ரீத்தி ஆத்ரேயா. இவரே அனைவரின் உடைகளையும் நேர்த்தியாக தேர்ந்தெடுத்திருக்கிறார். நாடகத்தின் மிகப்பெரும் உறுத்தல் வானதி. வானதியாக நடித்த பவானி கண்ணன் தனது நடையை மாற்றினாலே உறுத்தல் போய்விடுமென நினைக்கிறேன் நான். மிருதுவான மெல்லிய மனம் படைத்த மங்கையாக உள்ளத்துள் நின்ற வானதி, ஆங்காரம் கொண்ட பெண்ணாகக் காட்சியளித்தாள் மேடையில். அடுத்த முறை வித்தியாசம் காண்போம் என நம்புகிறோம். பார்வையாளர்களின் சார்பில் சில எண்ணங்களைக் கூறலாமல்லவா!!!
1
“அல்லி ராஜ்யம் இங்கே நடக்கிறது” என்ற வசனத்திற்கு சிறிது நேரம் கழித்து, “ஓ வாரிசு அரசியல் அப்போதே தொடங்கி விட்டதா?”, இலங்கைக்கு வந்தவுடன், “இங்கே புலி இருக்கிறது என்றல்லவா நினைத்தேன்” என்று அரசியல் தலைதூக்குகிறது.

அநிருத்தராக 70 வயதான எஸ்.எம். சிவக்குமார். பாவம், “இந்த மனிதர் நாட்டிலுள்ள எல்லாப் பெண்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார் பாருங்கள்!! ” என்று வானதியிடம் திட்டு வேறு வாங்குகிறார். நகைச்சுவைக்காக சேர்த்திருப்பார்கள் போலும்!!

மேலும், அருள்மொழி கொலைமுயற்சியை இன்னும் தெளிவுடன் காண்பித்திருக்கலாம். பல கதாப்பாத்திரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன. மணிமேகலையைக் காணவில்லை. முருகதாசன், ராக்கம்மாள் இல்லை. வானமாதேவி, திருக்கோவிலூர் மலையமான்கூட. மேலும் மதுராந்தகனாக வந்த இளவரசன்ராஜா, அவ்வப்போது நெற்றிப்பட்டையை அழித்துவிட்டு, மக்கள் கூட்டம் தோன்றும் நாடகக் காட்சியில், மக்கள் கூட்டத்திற்குள் ஒருவராக பளிச்செனத் தென்படுகிறார் !!!

அரங்கத்தில் ஒலி, ஒளி அமைப்பு கச்சிதம். நடிகர்கள் ஒருங்கிணைந்து செயலாற்றிய விதம் மிக மிக பாராட்டுதற்குரியது. நிஜயானை போலவே ஒரு செயற்கை யானை எதிர்பாராத வியப்பு!!!

இளங்கோகுமணன் ஆரம்பத்திலேயே கூறினார். “சோழர்கள் காலத்திலே மொபைல் போன்கள் இல்லை” என்று. ஆனாலும், நிறைய பார்வையாளர்கள் தங்கள் மொபைல் போன்கள் மூலம் பிண்ணனி இசை சேர்த்துக் கொண்டிருந்தனர். “பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்க முயற்சித்திருக்கிறோம் என்றும் கூறினார் குமணன். “வாசிப்பை மீட்ட வாசமலர் ” என கல்கி இதழில் இவ்வாரம் குறிப்பிட்டுள்ளார்கள். உண்மை !!! புத்தகம் படிக்கும் முன்பாக அரங்கத்திற்கு வந்தவர்கள் கண்டிப்பாக இந்நேரம் கற்பனை ஓடத்தில் ஏறி கால வெள்ளத்தில் பிரயாணம் செய்ய ஆரம்பித்திருப்பார்கள்.

“சந்தர்ப்பம் என்பது கடவுளுக்கு ஒரு புனைப்பெயர். சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்வது மனிதனுடைய சமயோசித அறிவையும் சரியான சமயத்தில் சரியான முடிவு செய்யும் ஆற்றலையும் பொறுத்தது” என்று கல்கி குறிப்பிட்டிருப்பார். அது போல, ” பொன்னியின் செல்வன் நாடக வடிவத்தில் ” என்ற எண்ணம் ஒரு சந்தர்ப்பமாக வந்ததும், கெட்டியாக பிடித்துக் கொண்டு பயன்படுத்தியிருக்கிறார்கள். அடுத்த வருடம் நிகழ்ச்சிக்காகக் காத்திருக்கின்றேன், பொன் வைக்கும் இடத்தில் பத்தரைமாற்றுத் தங்கப்பூ, அதுவும் அதிசயமான வாசமிக்க தங்கப்பூ வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்.

குறிப்பு: படங்கள் இணையத்திலிருந்து எடுத்தவை.

No comments:

Post a Comment