Thursday, March 2, 2017

வீடு !!!

வெயில் முகத்தில் சுள்ளென்று அடித்தது.மெதுவாக விழித்தேன். வெகு நாட்கள் கழிந்து நீண்ட நேர உறக்கம். அம்மா வராண்டாவைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். பாப்பா இன்னும் தூளியில் உறங்க, வருண் லாப்டாப்பில் மூழ்கியிருந்தான்.பல் தேய்த்துவிட்டு அடுக்களை சென்றேன். அம்மா சிரித்துக்கொண்டே வந்து தோசை ஊற்ற ஆரம்பித்தாள். இப்படி அடுக்களை மேஜை மேல் அமர்ந்து, அம்மாவிடம் அரட்டை அடித்தபடி சுடச் சுட தோசை சாப்பிட்டு எவ்வளவு நாளாகிறது !!!

மெதுவாக பால்கனி வந்து அமர்ந்தேன். பாப்பா விழிக்கும் வரை கொஞ்சம் மழையை ரசிக்கலாம். இது எங்கள் புது வீடு. நேற்று தான் கிரகப்பிரவேசம் முடிந்தது. சுற்றி எங்கும் கான்கிரீட் காடு. சாமானிய மக்களின் வீடு பற்றிய கனவு என்றும் ஓய்வதில்லை. வருண் நிறைய பேசுவான். பில்டர்ஸ், கொள்ளை, வீட்டின் விலையைத்தாண்டும் வட்டி, வட்டி கட்ட.. இப்படி நிறைய ... உண்மை தான்.என்றாலும் மனது ஒப்புக்கொள்வதில்லை. ஒவ்வொரு சொந்த வீட்டிற்குப்பின்பும் நிறைவேறிய, நிறைவேறாத கனவுகள் பல.

நான் பிறந்து வளர்ந்தது அம்மாச்சி வீட்டில். ஏறத்தாழ 1500 சதுர அடி பரப்பளவில் லாடக்கட்டை மேல்தளம் கொண்ட வீடு. மொட்டை மாடியில் இருந்து பார்க்கையில் சுருளி அருவி தெரியும். சுற்றிலும் ரோஜாச் செடிகள். அடுக்களை புகைக்கூடு வழியாக மேலிருந்து கத்தி பெரியம்மாவை பயமுறுத்தலாம். பகலில் மாடி வராண்டாவில் படுத்துத் தூங்கும் சுகம் அலாதியானது. ஈசான அறையில் என்றுமே பரவியிருக்கும் ஒரு குளிர்ச்சி, குண்டு பல்பு வெளிச்சத்தில் அடுக்களை, கேரளா விளக்குகளுடன் பூஜையறை, ஜன்னல் அடைத்துப் பின் தாழிட மரத்திலேயே நத்தை போன்ற கட்டை.. சொல்லிக்கொண்டே போகலாம். இது எங்கள் வீடு அல்ல என்ற நிதர்சனம் புரிவதற்கு முன்பே வீட்டின் வாசம் என்னுள் பரவியிருந்தது.

அப்பாவிற்கு வேலை மாறுதல் கிடைக்க, அம்மா மகிழ்ச்சியாக வெளியேறினாள். அம்மாச்சியை விட்டுப் பிரிய இயலாதவளாக நான்.

பெரியகுளத்தில் ஒரு வீடு வந்தோம். ஏறும்போதே அப்பா கூறிவிட்டார். இன்னும் கொஞ்சம் நாள். புது வீடு கட்டலாம் என்று. அது பெரிய வீடு அல்ல. இக்காலத்தில் சொல்வது போல் 1BHK. அம்மா அரவணைப்பு, அப்பா செல்லம் என வாழ்க்கை ஓடியது. ஆனால் புது வீடு கட்டும் வாய்ப்பு மட்டும் ஏனோ கிடைக்கவில்லை. அம்மா கேட்டுக் கேட்டு அலுத்தாள். ஒரு நாள் கேட்பதை நிறுத்தினாள். ஏதொ குடியிருக்க ஒரு வீடு என்று அவளும் முடிவெடுக்க நான் ஒவ்வொரு வீடாகப்பார்த்துக் கற்பனை செய்ய ஆரம்பித்தேன் இது நம் சொந்த வீடாக இருந்தாலென்னவென்று.

பத்து வருடம் கழித்து, மற்றொரு வீடு. இரண்டாவது மாடியில். ரெட் ஆக்சைடு தரை. கொஞ்சம் பெரிய வீடு. திறந்தவெளி கொஞ்சம். இது தான் எங்கள் சொந்த வீடு போல் சுற்ற ஆரம்பித்தேன். வரவு அனைத்தும் சரியாக செலவாக,லோன் போட பயந்து அப்பாவும் கனவைக் கைவிட்டார். "மத்தவங்க வீட்ட நம்ம வீடா நினைச்சுப் பாத்தா ஆண்டவன் எங்களுக்கில்லாட்டியும், உனக்கு புது வீடு அமச்சுக் கொடுப்பான்" என்று கூறுவாள் அம்மா. அங்கு தான் வந்து சேர்ந்தது ஓனரின் பராமரிப்பு கிடைக்காத ரோஜாச்செடிகள். ரோஜாக்கள் மத்தியில் நிலாச்சோறு சாப்பிடும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். சொந்த வீட்டில் ரோஜாக்கள் நிறைய வேண்டும். அப்பா அம்மாவுடன் இதே போல் மனதார மகிழ வேண்டுமென்று. பக்கத்தில் ஒரு சர்ச். அம்மா இங்கே முழங்காலிட்டு ஜபம் பண்ண ஆரம்பித்துவிடுவாள். புது வருடம் 3 மணிக்கே எழுந்து சர்ச்சில் 1கொடியேறுவதை பார்த்து விட்டுத்தான் அடுத்த வேலை. எனக்கு அதில் பெரிய நாட்டம் ஒன்றும் இருந்ததில்லை. ஆனால் சனிக்கிழமை அம்மாவுடன் கைகோர்த்துக்கொண்டு ஆடு பாலம் கடந்து தென்கரை பெருமாள் கோவிலுக்குப்போகப் பிடிக்கும். அந்த வரதராஜப் பெருமாளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். என்னிடம் ஏதோ பேசுவது போலவே இருக்கும்."அம்மா.. இங்க பக்கத்துலேயே புது வீடு கட்டலாம்மா.." என்று சொன்னால் அம்மா சிரித்துக்கொண்டே நடப்பாள், பதிலிருக்காது.

பத்தாவது தேர்வு நெருங்க நெருங்க அப்பா தேனியில் வீடு தேடினார். நான் தினமும் அரை மணி நேரம் பயணித்து பள்ளி செல்வதில் நான் களைத்துவிடுவேனென்றுமனதிற்குள் சிரித்துக்கொண்டேன். இப்போது சென்னையில் ஷேர் ஆட்டோ பிடித்து ரயில் நிலையம் வந்து, லோக்கல் டிரெயினில் ஒரு மணி நேரம் பயணித்து, பின்பு அங்கிருந்து பஸ்ஸில் ஐந்து நிமிடங்கள். கேட்பாரில்லை.

தேனியில் முதலில் ஒரு வீடு. எனக்காக இருவருக்கும் அரை மணி நேரப் பயணம். ஆனாலும் அம்மா வீட்டில் இருப்பாள் நான் வரும் முன். அல்லது, பள்ளிக்கு போன் செய்து விடுவாள். நான் பள்ளியிலேயே அம்மா வரும் வரை இருப்பேன். அங்கேதான் முதலில் அப்பாவிற்கு உடம்புக்கு முடியாமல் போனது. லோ சுகர் என தெருவில் நாலு பேர் தூக்கி வந்தார்கள். குடிபோதையோ என்னும் எண்ணப்பதாகை தாங்கி வேடிக்கை பார்த்தது தெரு. விட்டு விட்டு சுகர் லோ ஆனது. இரண்டு நாட்கள் கழித்தே நார்மலானார். வீடு ராசி இல்லை என புலம்ப ஆரம்பித்தாள் அம்மா.

வந்து இரண்டு மாதத்திலேயே மற்றொரு வீடு. அங்கு தான் பெரிய திறந்த அலமாரி. கிடைச்ச ப்ரைஸ் எல்லாத்தையும் வைத்து ஒரே சந்தோஷம். இரவு பகலாய் பத்தாவது பன்னிரண்டாவது படித்தது அங்கே தான். கல்லூரியில் இடம் கிடைத்து நான் சென்றபின், மறுபடியும் பெரியகுளமே வந்து விட வீடு தேடும் படலம்.

"பெரிய வீடு ஒன்னு ஒத்திக்கு வருது டா. அப்பா அத முடிச்சிருக்கார்"னு அம்மா போனில் சொல்லும் போது ஏதோவொரு தயக்கம் தெரிந்தது. "பெரிய வீடு..  தகுதிக்கு மீறி போறோமானுத் தோணுது வேற ஒன்னுமில்லை" என்று சொல்லிக்கொண்டாள். வாராவாரம் வந்து அப்பா அம்மாவுடன் சுற்றுவது, மீண்டும் பெருமாள் கோவில், வீட்டின் எதிரே தென்னை மரங்கள் மற்றும் எனைவிட்டு நீங்காத புது வீட்டுக் கனவு .. எல்லாம் நன்றாகத் தான் இருந்தது, அன்று எதிர்பாராமல் அப்பா இறக்கும் வரை.

அதன்பின் நடந்தவை எதுவும் எங்கள் கட்டுக்குள் இல்லை. ஊரில் அம்மாச்சி வீட்டிற்கே மறுபடியும். எந்த வீட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் வந்தேனோ, அங்கு இப்போது ஒரு பாரமாக.

சிறிது நாளில் தெளிந்தேன். இனிமேல் அம்மாவும் நானும் பக்கத்திலேயெ தனியா இருந்துக்குறோம் என்று ஒட்டும் இல்லாமல் பிரிவும் இல்லாமல் வெளியே வந்தோம். வீடு மாறுவது என்ன புதிதா?அங்கு மட்டும் ஏதொவொரு பிரச்சனை வர வர,ஐந்து வீடுகள் மாறியாகிவிட்டது. இதற்கிடையில் படித்து, வேலைக்குப்போய், திருமணமும் ஆகி விட்டது.அம்மாவை உடன் அழைத்தேன். கண்டிப்பாக வரமாட்டேனென்று சொல்லிவிட்டாள்.
கணவர் வீடு சொந்த வீடு. ஆனாலும் அந்ந வீடு எனக்கு அந்நியமாகவே பட்டது.ஐந்து வருடங்கள் ஓட, அம்மா ஓய்வு பணம் வர, வீடு வாங்கும் பேச்சை மறுபடியும் ஆரம்பித்தேன். வாங்கலாம் வேண்டாம் சரியா தப்பா என பல மனக்குழப்பங்களினூடே ஏதோ ஒரு சக்தி இழுத்தது. இதோ இந்த வீடு.

"பால்கனியில் தோட்டம் வைக்க வேண்டும்.அம்மா.. ஒரு மூங்கில் ஊஞ்சல் வாங்கனும்.சின்ன வயசுல இருந்து எவ்ளோ ஆச தெரியுமா? சொந்த வீட்டுல ஊஞ்சலாடனும்ணு.. எனக்கு கிஃப்ட் வந்த விண்ட் சைம் எங்கம்மா? வாசல்ல மாட்டலாம் குடு..." பேசிக்கொண்டே இருக்க, அம்மாவின் முகத்தில் வினா கலந்த சிரிப்பு மட்டும்.


"வீணா .. என்ன பண்ணுற .. லக்கேஜ் எடுத்து வச்சுட்டியா.. பாப்பா தூங்குறப்பவே எடுத்து வை. ஒரு மணிக்கு ட்ரெயின். மறந்துடாத. அம்மா நாலு வாட்டி போன் பண்ணிட்டா எப்போ வருவிங்கன்னு" ... வருண் பேசிக்கொண்டே குளிக்க சென்றான். தோசை உள்ளே இறங்க மறுத்தது. ஒரு நிமிடம் அனைத்தும் தகர்ந்தது போல தோன்றியது. இல்லை. எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. பெண்களுக்கு நிரந்தர வீடே இல்லை பின் எப்படி சொந்த வீடு, அதில் அப்பா அம்மாவுடன் என்ற கனவெல்லாம் நிஜமாகப் போகிறது. நிதர்சனம் புரியாமல் இருப்பது உரைத்தது. "சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்தையெடம் தானே.. தவளைக்கும் பொம்பளைக்கும் இரண்டு இடம் தானே...." எங்கோ பாடல் ஒலித்தது.