அம்மன்குடி
ஐந்தாம்
வகுப்பில் ஆரம்பித்தது கல்கி படைப்புக்கள் மீதான
காதல். அன்றுதொட்டு, வந்தியத்தேவன் செல்லும் வழியெல்லாம் பிரயாணப்பட
ஆசை. பாண்டிய தேசத்தோடு சேர
தேசம் இணையுமிடத்தைப் பூர்வீகமாகக் கொண்டதனால், சோழ தேசம், பரிகாரங்களுக்கு
வரும் இடமாகவே எனக்கு இருந்தது.
ஒரு வரலாற்றுப் பயணம் செல்லும் பாக்கியம்
ஏனோ இதுவரை அமையவில்லை. ஆனால்,
சோழ தேசத்துக் கணவன் வாய்க்கப் பெற்றேன்.
கல்கி படைப்புக்கள் தவிர, சோழ தேசம்
பற்றி, வேறு புத்தகங்கள் படிக்க
ஆசை கொண்டு ஆரம்பித்தது "உடையார்".
மற்ற நூல்கள் தேடிப் போகிறது
என் பயணம்.
உடையார்,
மக்கள் வரலாறு, மக்களோடு இயைந்து,
இணைந்து, சோழதேசம் வளர்த்த இராஜ
இராஜனின் கம்பீரக் காவியம்.
படித்ததுமே,
பார்க்க வேண்டிய இடங்களைப் பட்டியலிட்டேன்.
என்னே அதிசயம்!!! அதில் பாதிக்குமேல் , என்
கணவரின் பூர்வீக கிராமத்தின் அருகிலேயே
உள்ளது.
இனிமேல்
அங்கு செல்கையிலெல்லாம், ஒவ்வொரு இடங்களாகப் பார்க்க
வேண்டும் என்பதில் உறுதிபூண்டாயிற்று.
முதலில்
அமண்குடி(தற்போது, அம்மன்குடி). கும்பகோணத்திலிருந்து
14.8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது அம்மன்குடி.
கோவில் பழங்காலத் தோற்றம் கொள்ளாது, சமீபத்தில்
பல மாறுதலுக்குள்ளாகி குடமுழுக்கு
நடத்தப் பட்டது போல் தோற்றமளித்தது. தமிழகத்தில்
உள்ள மிகப் பழமையான திருக்கோவில்களில்
இதுவும் ஒன்று.
இராஜ இராஜ சோழனின் முதன்
மந்திரி கிருஷ்ணன்ராமன் பிரம்மராயரின் சொந்த ஊர்.
கி.பி. 5ம் நூற்றாண்டில்
கோச்செங்கணன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. 944 கி.பி.-ல் கட்டப்பட்டதாகவும்
எழுதியிருக்கிறார்கள். அதாவது, தஞ்சை பெரிய
கோவில் கட்டும் முன்னரே இங்கு
ஒரு துர்கை அம்மன் கோவில்
உள்ளது.
உடையாரில்,
பாலகுமாரன் வாயிலாக கிருஷ்ணன்ராமன் கூறுகிறார்
- "என்னுடைய ஊரான அமண்குடியில், அரசரின்
பெயரால், அரசனுக்குப் பிடித்த சிவனுக்கென்று ஒரு
கோயில் நான் நிச்சயம் எழுப்புவேன்.
அருகில் பாலதிரிபுரசுந்தரியை ஸ்தாபிப்பேன்.... ஆதிகேசவா,
சிவன் கோயில் மட்டுமல்லாது அஷ்ட
தச புஜ துர்க்கைக்கும்
ஒரு சந்நிதி ஏற்படுத்தி, என்
ஊர்மக்கள் வழிபடும்படி நான் செய்வேன்..."
அப்படியெனில்,
944ம் ஆண்டு அங்கு துர்கை
அம்மன் கோவில் இருந்திருக்கிறது ஆனால்
அஷ்ட தச புஜங்க துர்க்கையாக
அல்ல. இப்போது அஷ்ட புஜ
துர்கை சந்நிதி உள்ளது. அருகில்,
கைலாசநாதர், பார்வதி.
பிரகாரத்தில்,
ஓர் உயரமான லிங்க வடிவம்
உள்ளது. லிங்கம் என்றால், பாணம்
மட்டும் உள்ளது. ஆவுடையார் இல்லாமல்.
அதன் முன்பு, சிறிய நந்தி,
அதன் வலப்புறம் திரும்பிப்பார்த்தவாறு. இவற்றின் வரலாறு, மகத்துவம்
தெரியவில்லை. பூசைகளற்று தனியே இருக்கும் இந்த
பாணம், கோவிலுக்கு வருபவர்கள் எண்ணெய் ஊற்ற மட்டுமே
உள்ளது. ஆனால் அதன் அழகு
வெகுவாக ஈர்க்கிறது.
பிரகாரம்
சுற்றிவந்தபின், யாரிடமேனும் வரலாறு அறியலாம் என்றெண்ணி,
ஓரு முதியவரிடம் பேசினேன். அவர் அறிந்தவரை, அந்த
பாணமே ஆரம்ப காலத்தில், அதாவது,
தஞ்சை பெரிய கோவில் கட்டி
முடித்த பின்பு, கிருஷ்ணன்ராமன் பிரம்மராயர்
இக்கோவில் கட்டுகையில் நிர்மாணித்தது என்றார். ஆவுடையார் இருந்ததா?
நிர்மாணிக்கும் முன் ஏதேனும் காரணங்களால்
கைவிடப்பட்டதா? இல்லை வேற்று படை
எடுப்பில் சிதிலமானதா? தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்,
காஞ்சி மடாதிபதி(எந்த வருடமென்று
முதியவருக்கு நினைவில்லை. அவரின் சிறு வயது
எனக் கூறினார்) இங்கு வந்த போது,
இருக்கும் இந்தப் பெரிய பாணத்திற்கு
இந்த கோபுரத்தின் அளவு குறைவாக உள்ளது
என்றாராம்(காரணம் தெரியவில்லை). எனவே,
அவரின் காலத்தில், புதிதாக ஒரு லிங்கம்
ஸ்தாபிக்கப்பட்டு, குடமுழுக்கு நடந்துள்ளது. அதுவே இப்போதுள்ள மூலவர்
என முதியவர் தகவலளித்தார்.
இந்தச் செய்தி எந்த அளவிற்கு
உண்மை எனத் தெரியவில்லை. ஆனால்,
உண்மையாக இருக்கும் பட்சத்தில், பிரகாரத்தில் பராமரிப்பு அற்றுக் கிடப்பது வேதனையே.
முகவுரையில்
பாலகுமாரன் எழுதியிருப்பார், அம்மன்குடி அமானுஷ்யங்கள் நிறைந்தது என. அப்படிப்பட்ட பழமையான
கோவில் கட்டுமானம் தற்காலக் கோவில் போல்
காட்சியளிக்கிறது இப்போது. குடமுழுக்குக்குப்பின், அன்றாடப் பராமரிப்பு
இருப்பதாகத் தோன்றவில்லை.
இன்னும்,
அந்தச் சிறிய நந்தி என்
கண்களை விட்டு அகலவில்லை.
வேறொரு சந்தர்ப்பம் கிடைக்கையில் இராஜ இராஜன் காலத்து
இடங்கள் சில சென்று, அப்பதிவுகளில்
சந்திப்போம்.