என்னவென்று தெரியவில்லை. வேற எந்த எழுத்தாளர் புத்தகம் படித்தாலும், பாராட்டினாலும், கல்கியின் படைப்புக்களைப் படிக்கிறபோது வருகிற மகிழ்ச்சி கிடைப்பதில்லை. கல்கி எனக்கு அறிமுகமாவதற்கு முன்பே அறிமுகமானவர் ஆதித்த கரிகாலன் சிறு வயது முதலே பெரியம்மா அடிக்கடி பேசும் கதாப்பாத்திரம் கரிகாலன். கோகுலம் இதழை அறிமுகப்படுத்தியதும் பெரியம்மா தான்.
பிறகு ஒரு நாள், ஐந்தாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு சமயம் என்று நினைக்கின்றேன், கல்கி வார இதழ் கைக்கு வந்தது. “பொன்னியின் செல்வன் வாரத் தொடராக வருகிறது. படி.”, என்றார். ஆனால் அதற்கு முந்தைய வாரமே ஆரம்பித்து விட்டது போலும். மூன்றாம் அத்தியாயத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். வந்தியத்தேவன் பயணத்தோடு, நானும் பயணப்பட ஆரம்பித்தேன். முதன்முதலில் பொன்னியின் செல்வன் வார இதழாக வெளிவந்த போது, மணியம் செல்வன் ஓவியம். நான் படித்த போது, பத்மவாசன் ஓவியம். சில்பியின் சீடர்.வாரத்திற்கு 3 கருப்பு வெள்ளைக் கோட்டோவியமும், 1 வண்ணம் தீட்டிய ஓவியமும் வரைந்திருப்பார். படிக்க, அப்படங்களை வரைந்து பழக, என கல்கி என் வாழ்வோடு இணைந்தே இருந்தார். வந்தியத்தேவன் மேல் அதிக ஈர்ப்பு எனக்கு, பொன்னியின் செல்வன் படிக்கும் அனைவரைப் போலவும்.குந்தவை,நந்தினி,அருள்மொழிவர்மர்,அநிருத்தர் … அப்பப்பா .. பலப்பல கதாப்பாத்திரங்கள். ஆனால் அனைவரும் மனதில் ஒட்டிக் கொள்வர். பொன்னியின் செல்வன் முதல், நந்தினியின் சேடிப்பெண் வரை. இரண்டாம் பாகத்தில், வந்தியத்தேவன் புயல், மழையில் மாட்டிக்கொண்டு தவிப்பதை படித்துவிட்டு, வெளியில் செல்லும்போது, மழை என குடையுடன் கிளம்பி, வீட்டில் அனைவரும் சிரித்தது மறக்கமுடியாதது.கரிகாலன் இறக்கும் அத்தியாயம் வருவதற்கு முந்தைய வாரம் சாப்பாடு உள்ளே இறங்கவில்லை. வந்து, படித்ததற்குப்பின்பும் தான். பத்மவாசன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். பழுவேட்டரையர் இறக்கும் காட்சியை வரைந்து முடித்தவுடன், கருப்பு பேனாவின் மை தீர்ந்துவிட்டதாம். அதை ஒரு ஓரமாக வைத்ததும், பெரிய பழுவேட்டரையரின் உடல் கிடத்தப்பட்டது போன்றே இருந்ததாம் அவருக்கு. இரவு முழுதும் அழுததாகக் கூறியிருந்தார்.
பொன்னியின் செல்வனை அத்தியாயம் அத்தியாயமாக சேமித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே, சிவகாமியின் சபதம் கைக்கு வந்தது.முதன்முதலில் வாரத்தொடராக வெளிவந்ததின் தொகுப்பு, மணியனின் கைவண்ணத்தில். கைவந்தவுடன், அரைநாளில் படித்து முடித்துவிட்டவுடன் வந்த திருப்தியை இப்பொழுதும் உணரமுடிகிறது. அதன்பின், வந்தியத்தேவன், அருள்மொழியுடன் மாமல்லரும், சிவகாமியும் கனவில் உலாவர ஆரம்பித்தனர். பின்பு பார்த்திபன் கனவு. பொன்னியின் செல்வம் அளவிற்கோ, சிவகாமியின் சபதம் அளவிற்கோ பெரிதாக இல்லையாயினும், கல்கியின் தனித்தன்மை காண்பது நிச்சயம். பார்த்திபன் கனவு சிவகாமியின் சபதத்திற்கு முன்பே வெளியானதென்று நினைக்கின்றேன். சரியாகத் தெரியவில்லை. அதிலேயே சிவகாமியை நமக்கு அறிமுகப்படுத்தியிருப்பார் கல்கி.
இவையனைத்தையிம் படித்தபின்பும், அலை ஓசை(1956 – சாகித்திய அகாதமி விருது) படிக்கவில்லை என்ற ஏக்கம் உள்ளுக்குள் இருந்தது. புதிதாக வாங்கிப் படிப்பதை விட, வாரத் தொடராக, அடுத்த அத்தியாயத்தைப் பற்றிய தேடலுடன் படிப்பதில் ஆர்வம். பொன்னியின் செல்வன் முடிந்த சில நாட்களில், சிவகாமியின் சபதம் தொடராக வெளிவந்தது, அம்முறை பத்மவாசனின் திறமையுடன். அதற்காக ஒருதரம் சேமித்தேன். பின்பு, அலை ஓசை வரும் என்று காத்திருந்தேன். (இன்றைய தேதி வரை காத்திருக்கிறேன், அலை ஓசையை பத்மவாசனின் கைவண்ணத்துடன் புத்தகத்திற்குள் அடைக்க!! ). அச்சமயம், அப்பொழுதும் பெரியம்மா தயவில்தான், அவரது பள்ளி நூலகத்திலிருந்து அலை ஓசை வாங்கி அளித்தார். அதுவும் பொன்னியின் செல்வன் போலிருக்கும் என்று நினைத்தவளுக்கு, அப்படியில்லையென்று புலப்பட்டது.படிக்கப் படிக்க சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டது போல ஒரு உணர்வு. சீதா என்கிற அப்பாவி பெண்ணின் வாயிலாக, அப்போதிருந்த இந்தியாவை படம் பிடித்துக்காட்டியிருப்பார் கல்கி. தாரிணி, சீதா, லலிதா என அனைவரும் சுதந்திரத்தின்போது வாழ்கின்ற கதைமாந்தர்கள். பாதி வாசித்திருந்தபோதே, ஏதொ கணக்கெடுப்பிற்காக புத்தகத்தைத் திருப்பியளிக்க வேண்டிய நிலை.மாலை ஆரம்பித்து, இரவிற்குள் முடித்து, கண்ணீருடன் இரவெல்லாம், நாம் அறியாத விடுதலைப் போராட்ட தாரிணிகளைப் பற்றி நினைத்து விழித்திருந்த ஞாபகம் இருக்கின்றது.
கள்வனின் காதலி, தியாகபூமி, சோலைமலை இளவரசி என பல கல்கியின் படைப்புக்கள். ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றியும் விரிவாக பதிவிட ஓர் எண்ணம் உள்ளது.
கள்வனின் காதலி, தியாகபூமி, சோலைமலை இளவரசி என பல கல்கியின் படைப்புக்கள். ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றியும் விரிவாக பதிவிட ஓர் எண்ணம் உள்ளது.
அண்மையில், முகநூலில் கண்டெடுத்த பத்மவாசனின் ஓவியம் இங்கே!!!
அருள்மொழிவர்மர்